Last Updated : 23 Jan, 2014 12:00 AM

 

Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

சென்னையில் பொதுக்கழிப்பிடங்கள் கோரி 1 லட்சம் கையெழுத்து இயக்கம்: மார்ச் 15-ம் தேதி முதல்வரிடம் வழங்க தேவை அமைப்பு திட்டம்

மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னையில் பொதுக்கழிப்பிடங் கள் கட்டித்தர வேண்டும் என்று மாநகராட்சியை வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது ‘தேவை’ என்ற பெயரில் செயல்படும் அமைப்பு.

இந்தக் கையெழுத்துப் பிரதியை மார்ச் 15-ம் தேதி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மக்கள் தொகை சுமார் 80 லட்சம். நகருக்கு தினமும் வந்து செல்வோர் 20 லட்சம். ‘சென்னையில் 41 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகளிலும் சாலையோரங்களிலும் வசிக்கின்றனர்’ என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார்.

அதன்படி, சுமார் 40 லட்சம் பேர் பொதுக்கழிப்பிடத்தைப் பயன் படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னையில் 857 இலவச கழிப்பிடங்களும், 42 கட்டண கழிப்பிடங்களும் என மொத்தம் 899 பொதுக்கழிப்பிடங்கள்தான் உள்ளன. சில பகுதிகளில் 6 ஆயிரம் பேருக்கு ஒரு பொதுக் கழிப்பிடமும், 2 ஆயிரம் பேருக்கு ஒரு பொதுக்கழிப்பிடமும் உள்ளன. மேலும் பல இடங்களில் பொதுக்

கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. போதிய கழிப்பிட வசதி இல்லாததால், ஆங்காங்கே மக்கள் திறந்தவெளியை கழிப்பிடங் களாகப் பயன்படுத்தும் அவலமும் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுக் கழிப்பிடங்களை மாநகராட்சி கட்டித் தரவேண்டும் என்று கோரி சென்னை வியாசர்பாடியில் செயல்படும் ‘தேவை’ என்ற அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை முன் வைத்து ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகிறது.

‘‘கடந்த 2 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் காக ரூ.3,189 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. மேலும் அரசு தரப்பிலும் ரூ.734 கோடி நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். ஆனால், ஒரு புதிய பொதுக்கழிப்பிடம்கூட கட்டப்படவில்லை. கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் (பி.ஓ.டி.) திட்டத்தின் மூலம் புதிதாக 5 ஆயிரம் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும் என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர்.

கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் ‘தேவை’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியதாவது:

‘பொதுக்கழிப்பிடம் வேண்டும்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை மக்களிடம் கொடுத்து, கையெழுத்து வாங்கு கிறோம். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பி.சிவகாமி, முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி, மூத்த பத்திரிகையாளர் ஆர்.பக வான் சிங் உள்பட 45 ஆயிரம் பேர் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர்.

வரும் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் கையெழுத்துகளை வாங்கிவிடுவோம். மார்ச் 15ம் தேதி இந்தப் பிரதிகளை ஆளுனர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுக்க உள்ளோம். இவ்வாறு இளங்கோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x