

‘அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான ‘தி இந்து மையம்’ சார்பில் தெலங்கானா தொடர்பான கருத்தரங்கு ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆந்திரத்தில் முக்கிய பிரச்சினையாகி தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள தெலங்கானா விவகாரத்துக்கு தீர்வு காண பல்வேறு தரப்பினரும் தங்களது ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைக்க வேண்டும் என இந்தக் கருத்த ரங்கில் தொடக்க உரையாற்றிய இந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் மாலினி பார்த்தசாரதி வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது:
நமது நாட்டின் அரசியல் அமைப்புகளை யும் மக்களாட்சி முறையையும் செழு மைப்படுத்தி வலுப்படுத்துவது மற்றும் தேசத்தின் கட்டமைப்பை சிறப்பாக்கு வது ஆகிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது ‘தி இந்து’ மையம்.
இந்த மையம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள விவாத அரங்கின் நோக்கம், தெலங்கானா பற்றிய வெவ்வேறு கருத்துகளை ஒருங்கே கொண்டு வந்து, பொதுக்கருத்தை எட்டுவதுதான்.பழுத்த அரசியல்வாதிகள், கல்வி அறிஞர்கள், நிர்வாகத் துறை வல்லுநர்கள் என பலரும் இங்கே குழுமியுள்ளனர். இந்த விவகாரத்துக்கு தீர்வு காண தங்களது யோசனைகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தெரிவிக்கலாம் என்றார் டாக்டர் மாலினி பார்த்தசாரதி.
கருத்தரங்கில் விவாதம்
சமரசத்துக்கான விவாதம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய அரசமைப்பு சட்ட வரம்புக்கு உட்பட்டு சுயாட்சி உரிமைக்காக இந்த பிராந்திய மக்கள் மேற்கொண்ட நியாயமான இயக்கம்தான் தெலங்கானா போராட்டம் என்றார் டிஆர்எஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.டி. ராமா ராவ். தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவரான சந்திரசேகர ராவின் மகன் இவர். தெலங்கானாவின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்க வேண்டும். தெலங்கானா பகுதியைச் சேர்ந்ததுதான் ஹைதராபாத் என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.வி.ராகவலு , இரு தரப்பையும் அழைத்துப் பேசி அரசியல் ரீதியிலான இணக்க முயற்சியை மேற்கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார். ஹைதராபாத் நகரின் நிலைமை, நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு அரசியல்ரீதியில் தீர்வு காண வேண்டும். இரு மாநிலஙகள் உருவானாலும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படாது . முதலில் அரசியல்ரீதியில் தீர்வு கண்டால்தான் பிறகு படிப்படியாக எல்லாவற்றையும் பேசி தீர்க்கலாம் என்றார் ராகவலு.
தெலங்கானா உருவாக்கம் பற்றி காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு அறிவித்த பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே. ஹரிபாபு.
பொதுக்கருத்து ஏற்படாத நிலையில் ஒரு முடிவு எடுக்கும்போது அந்த முடிவால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்களை அழைத்துப் பேசி கருத்தறிவது ஆளும் கட்சியின் கடமை என்று அரங்கில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர்,
சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவர்களை அணுகி அவர்களின் அச்சம், சந்தேகங்களை களைவதே சரியானது என்றும் சிலர் யோசனை தெரிவித்தனர். ஹைதராபாதை யூனியன் பிரதேசமாகவோ அல்லது இரண்டுக்கும் பொதுவான தலைநகர மாகவோ அறிவிக்கலாம் என்ற யோசனையை பெரும்பாலானவர்கள் நிராகரித்தனர்.
அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான 'தி இந்து மைய'த்தின் இயக்குநர் டாக்டர் மாலினி பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார். கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக குழுவின் உறுப்பினரான அருண் ஆனந்த் நன்றி தெரிவித்தார்.