

அதிமுக எம்எல்ஏக்கள் 3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியிலும், ஆட்சி யிலும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க் கொடி உயர்த்த, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கே.பழனிசாமி முதல்வரானார்.
ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. ஆர்.கே.நகர் இடைத்தேர் தல் காரணமாக பட்ஜெட் நிறை வேற்றப்பட்ட உடன் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது என அடுத்தடுத்து நடந்த அதிரடி திருப்பங்களால் சட்டப்பேரவைக் கூட்டம் தள்ளிப்போனது.
இந்நிலையில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக வரும் 14-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்க வுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக் கள் இருக்கும் நிலையில், சுமார் 27 அதிமுக எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் 3 அணிகளாக பிரிந்துள்ளனர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் பழனிசாமி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க பிரதான எதிர்க்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக கொறடா அர.சக்கரபாணி, முன்னாள் அமைச் சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோருடன் திமுக செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நேற்று ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்டாலினிடம், ‘‘தற்போதைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘சட்டப்பேரவை கூடும் வரையில் இந்த ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள் ளது. ஆட்சி நிலைத்து சட்டப் பேரவை கூடும்போது திமுக தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும்’’ என தெரிவித்தார்.
துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் போது எம்எல்ஏக்கள் கொடுக்கும் வெட்டுத் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லையென்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்க மு.க.ஸ்டாலின் வியூகங் களை வகுத்து வருவதாக அக்கட்சி யினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக திமுக முதன்மைச் செய லாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனிடம் கேட்டபோது, ‘‘சட்டப்பேரவையில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். அதிமுக அரசை எதிர் கொள்வதற்கான வியூகங்களை அவர் வகுப்பார்’’ என்றார்.