

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று வலம்புரி சங்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னர், அப்பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கல்தூணில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இதன் தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் பக்தர் ஒருவரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல், மற்றொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக வைக்கப்படும் பொருளை, அதன் குறியீடாகவே அப்பகுதி மக்கள் கவனிக்கின்றனர்.
கடந்த 28-ம் தேதி ருத்ராட்சம் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று முதல் வலம்புரி சங்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “வலம்புரி சங்குக்கென சில தனித்தன்மைகள் உள்ளன. இவற்றால் தனிப்பட்ட அல்லது நாட்டின் மழை, செல்வம், தொழில் வளங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இவை ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றனர்.