ஆந்திரத்தில் பாலாற்று தடுப்பணை உயரத்தை அதிகரிப்பதா?- ராமதாஸ் கண்டனம்

ஆந்திரத்தில் பாலாற்று தடுப்பணை உயரத்தை அதிகரிப்பதா?- ராமதாஸ் கண்டனம்
Updated on
2 min read

புல்லூர் தடுப்பணை உயரத்தை அதிகரித்து, பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தும் பணிகளை ஆந்திர மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசனம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழகத்தில் பாய்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திரத்தில் 33 கி.மீ. தொலைவும் ஓடும் பாலாற்றின் குறுக்கே முறையே 18 தடுப்பணைகளும், 32 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், 222 கி.மீ. பாயும் தமிழகத்தில் ஒரே ஒரு தடுப்பணை மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது.

பாலாற்றில் வரும் தண்ணீர் முழுவதையும் ஆந்திரம் தடுப்பணை கட்டி தடுத்து விட்டதால், ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் தமிழகத்திற்கு பாலாற்றில் தடுப்பணைகள் மீது வழிந்து வரும் தண்ணீரையும் தடுக்கும் வகையில் புல்லூரில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ஆந்திரம் அதிகரித்து வருகிறது.

பாலாற்றின் குறுக்கே புல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணையின் உயரம் 5 அடியாகும். அதை இப்போது 10 அடிக்கும் அதிகமாக உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று வரும் போதிலும், அதை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடைபெறும் புல்லூர் கிராமம் அமைச்சர் நிலோபர் கபீலின் வாணியம்பாடி தொகுதியில் வருகிறது. இது குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தகவல் அளித்துள்ளனர். ஆனால், 'விழிப்புடன் செயல்படும் விவசாயிகள் நலன் காக்கும் அரசான' தமிழக அரசும், அதிகாரிகளும் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர். புல்லூர் தடுப்பணையின் உயரம் பத்து அடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டால், அது வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புல்லூர் தடுப்பணை தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திரத்தில் கட்டப்பட்டுள்ள கடைசி தடுப்பணை ஆகும். இந்த தடுப்பணைக்கு பிறகு தமிழக எல்லை தொடங்குகிறது. அணையின் உயரம் 5 அடியாக இருக்கும்போது ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் தடுப்பணையைத் தாண்டி தமிழக எல்லைக்குள் பாயும். இப்போது அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் அணையின் மீது வழிந்து வரும் தண்ணீரும் தடுக்கப்பட்டு விடும். இதனால் அப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரம் பறிக்கப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி அப்பகுதியிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த தடுப்பணைக்கு முன்பாக பழைமை வாய்ந்த கனக நாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரத்திலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தடுப்பணையின் உயரம் அதிகரிக்கப்படும் பட்சத்தில், நீர்த்தேக்கப் பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தால் கோயில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாகவும் புல்லூர் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

தடுப்பணை சுவரின் உயரம் அதிகரிக்கப்படுவதை தனித்த நிகழ்வாக பார்க்கக்கூடாது. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. புல்லூர் தடுப்பணைக்கு முன் 25 கி.மீ. தொலைவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து வருகிறது.

ஆந்திர அரசின் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு எதிராக எனது தலைமையிலும், கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையிலும் புல்லூர் தடுப்பணை பகுதியில் பல்வேறு போராட்டங்களை பாமக நடத்தியது. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமகவும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. இனி அங்கு தடுப்பணை கட்ட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த ஆந்திர அரசு, அதற்கு பதிலாக புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கணேசபுரத்தில் தடுப்பணை கட்டுவதை விட அதிக நன்மை ஆந்திரத்திற்கு கிடைக்கும்; மிக மோசமான பாதிப்புகள் தமிழகத்திற்கு ஏற்படும்.

கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்பட்டிருந்தால் கூட, அதற்கு பிறகு உள்ள 25 கி.மீ. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் புல்லூர் தடுப்பணையைத் தாண்டி தமிழகத்திற்கு வரும். ஆனால், இப்போது ஒருசொட்டு தண்ணீர் கூட வராது. அத்துடன் தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படுவதால் கூடுதலாக தேங்கும் 2 டி.எம்.சி தண்ணீரை பாதுகாத்து வைக்கும் நோக்குடன் சித்தூர் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களையும் ஆந்திர அரசு தூர் வாரியுள்ளது.

பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். புல்லூர் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், கடந்த ஒரு வாரத்தில் உயர்த்திக் கட்டப்பட்டுள்ள சுவற்றை இடித்துத் தள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in