விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத் தடைகள்: தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 17,218 பேர் பலி

விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத் தடைகள்: தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 17,218 பேர் பலி
Updated on
2 min read

10 செ.மீ. உயரம் மட்டுமே இருக்க வேண்டும்

விதிகளை மீறி அமைக்கப்படும் வேகத் தடைகளால் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டினப்பாக்கத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் தமிழக கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மனைவி நிவேதாவுடன் உடல் கருகி உயிரிழந்தார்.

வேகமாக சென்ற கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதுவே விபத்துக்கு காரணம் என விசாரணை நடத்தி வரும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தொடரும் சாலை விபத்துகளுக்கு பழுதடைந்த குண்டும் குழியுமான சாலைகள், முறையாக அமைக்கப்படாத வேகத் தடைகள், ஓட்டுநர்களின் கவனக் குறைவே காரணம் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரப் பகுதியில் 134 கி.மீ. நீளம் கொண்ட 22 சாலைகள் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளன. மாநகராட்சி பராமரிப்பில் 387 கி.மீ. நீளம் கொண்ட 471 பேருந்து தடச் சாலைகளும், 5 ஆயிரத்து 525 கி.மீ. நீளம் கொண்ட உட்புற சாலைகளும் உள்ளன.

விபத்துகளை தடுப்பதற்காக பள்ளிகள், சாலை சந்திப்புகள், மக்கள் அதிகமாக கடந்து செல்லும் பகுதிகள், அலுவலகங்கள் என 2,100 இடங்களில் மாநகராட்சி சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒளிரும் விளக்கு

வேகத்தடை அமைப்பதற்கு முன் அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும் 10 மீட்டர் தூரத்துக்கு முன்பாக வெள்ளை பெயிண்டால் எச்சரிக்கை கோடு போட வேண்டும். அதன் பின் வேகத்தடை அமைக்கும்போது அது 10 செ.மீ. உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அந்த உயரத்திலிருந்து 1.45 மீட்டர் வீதம் இருபுறமும் சரிவு கொடுக்க வேண்டும். பின்னர் அதன் மீது வெள்ளை பெயிண்டால் கோடு போட்டு அடையாளப்படுத்த வேண்டும். வேகத் தடைக்கான சரிவு துவங்கும் இடத்தில் ஒளிரும் டிவைடர் (ஒளிர் பட்டை) விளக்கு பொருத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை விதி உள்ளது.

ஆனால், முக்கிய சாலைகளில் மட்டுமே விதிமுறைகள் பெரும்பாலும் பின் பற்றப்படுகின்றன. உட்புற சாலைகள், கிளை சாலைகள், புறநகர் பகுதிகளில் பெரும்பாலும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இதுகுறித்து, போக்குவரத்து திட்டமிடல் பிரிவு உதவி ஆணையர் சுரேந்திரநாத் கூறும்போது, “வேகத் தடைகளில் உள்ள பெயின்ட் பயன்பாட்டுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட காலத்தில் அழிந்துவிடுகிறது. உடனடியாக இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவோம். அவர்கள் அதை சரி செய்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துகளில் மொத்தம் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துக்கு ஓட்டுநர்களின் அதிவேகம், கவனக்குறைவும் காரணமாக இருக்கின்றன” என்றார்.

மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் எஸ்.காளிமுத்து கூறும்போது, “சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. விதிமீறல்கள் இல்லை. கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் விபத்துக்குள்ளான வேகத்தடை கூட சட்டத்துக்கு உட்பட்டு அமைக்கப்பட்டதுதான்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in