

திருச்சியில் நடக்கவுள்ள திமுக 10-வது மாநில மாநாட்டுக்கு தொண்டர்கள் அனைவரும் குடும்பத்துடன் வரவேண்டும் என்று கட்சித் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக 10-வது மாநில மாநாட்டுப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன. வரவேற்புக் குழு, நிதிக் குழு, தீர்மானக் குழு, மலர்க் குழு, உபசரிப்புக் குழு,
பிரச்சாரக் குழு, பந்தல் குழு, மேடைக் குழு, அலங்காரக் குழு, விளம்பரக் குழு, தொண்டர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாநாட்டு அலுவலகப் பொறுப்பாளர்கள் என பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
அந்தந்தக் குழுக்களிலே இடம் பெற்றவர்கள் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்திடுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கும் நேரத்தில், பத்து லட்சம் பேர் திரளுவார்கள் என்று அறிவித்திருக்கிறோம். எனவே, பயணத்தில் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திருமண அழைப்பிதழ் களில்தான், குடும்பத்தினரோடும் உற்றார் உறவினர்களோடும் நண்பர்களோடும் முன்கூட்டியே வந்து சிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அழைப்பார்கள். நான் மாநாட்டுக்காக அழைக்கிறேன். குடும்பத்தினரோடும் உற்றார், உறவினர்களோடும் நண்பர்க ளோடும் முன்கூட்டியே வந்திருந்து, இரண்டு நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடப் பெரிதும் விரும்பி அழைக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.