

வங்கிகள் தனியார்மயமாக்கல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது மற்றும் வாராக் கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை உடனடியாக வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது.
இதை தடுக்க மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து, அனைத்து வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை (12-ம் தேதி), நாளை மறு நாள் (13-ம் தேதி) வேலை நிறுத்தத் தில் ஈடுபடப்போவதாக அறிவித் துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டபடி 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும்.
முதல் நாள் வேலை நிறுத்தத்தில் துணை வங்கிகளை சேர்ந்த 45 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பர். 2-ம் நாள் வேலை நிறுத்தத்தில் 3 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.