

வாகன வசதி இல்லாததால் பள்ளிக்குச் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு, ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார்.
இதில், அன்னூர் வட்டம், காரேகவுண்டம்பாளையம் அருகேயுள்ள அச்சம்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஊர்மக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: திருவள்ளுவர் நகரில் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து அச்சம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். தினமும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். வாகன வசதி இல்லாததால், கரடுமுரடான பாதையில் நடந்து செல்கின்றனர். இதனால், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. எனவே, எங்கள் பகுதியில் இருந்து பள்ளிக்குச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
சுற்றுச்சுவரை சீரமையுமா?
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.மோகன்ராஜ் அளித்த மனுவில், “கோவை பி.ஹெச். சாலையில் உள்ள காவலர் குடியிருப்பின் பின்புறச் சுற்றுச்சுவர் இடிந்து பல நாட்களாகிறது. அப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே, சுற்றுச்சுவர் கட்டித்தரவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆட்டோ ஓட்டுநர்கள்
மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலைவர் இரா.செல்வம், பொதுச் செயலாளர் பி.கே.சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், “மத்திய அரசு அறிவித்துள்ள போக்குவரத்து அலுவலக கட்டண உயர்வு அதிக அளவில் உள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீட்டர் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். உரிமம் எடுத்தும் நீண்ட காலமாக ‘பப்ளிக் பேட்ஜ்’ இல்லாமல் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, உடனடியாக பேட்ஜ் வழங்க வேண்டும். புதிய ஆட்டோ ஸ்டாண்டுகளில் தொழிற்சங்க கொடிக்கம்பம், பெயர்ப்பலகை அமைக்க அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
டாஸ்மாக் கடை அகலுமா?
தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஆறுச்சாமி அளித்த மனுவில், “கோவை-திருச்சி சாலையில், ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் அருகிலேயே அரசுப் பள்ளிகள், கோயில்கள், தேவாலயம், பாடப் புத்தகங்கள் விற்கும் கடைகள் உள்ளன.
மதுக் கடையால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலை ஓரத்திலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலும் உள்ள இந்தக் கடையை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.