Published : 12 Mar 2017 11:18 AM
Last Updated : 12 Mar 2017 11:18 AM

குடியிருப்பு அருகிலேயே குப்பை கொட்டும் வளாகம்: ஆர்.கே.நகரில் சுவாச கோளாறால் மக்கள் அவதி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிக்கு அருகில் இயங்கிவரும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தால், அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டு களாக சுவாசக் கோளாறு மற்றும் பல்வேறு நோய்த் தொற்றுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொடுங்கையூர் குப்பை கொட் டும் வளாகம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த வளாகம் சுமார் 200 ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ளது. சென்னை யில் தினமும் உருவாகும் 4 ஆயி ரத்து 500 டன் குப்பைகளில் சுமார் 2 ஆயிரத்து 300 டன் குப்பை கொடுங்கையூரில் கொட்டப்படு கிறது. இந்த வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் வசிக்கும் பகுதி அமைத்துள்ளது.

தொடக்கத்தில், எந்த விதிமுறை களும் வகுக்கப்படாத நிலையில், அள்ளப்படும் குப்பைகள் அப் படியே கொட்டப்பட்டு வந்தன. அதன் பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்-1986-ல் திடக்கழிவு மேலாண்மை விதிகள் சேர்க்கப்பட்டு, அந்த விதிகளும் கடந்த ஆண்டு திருத்தி யமைக்கப்பட்டன. அந்த விதியில், குப்பைகள் முதலில் உருவாகும் பகுதியாக விளங்கும் வீடுகளி லேயே மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகை பிரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பிரிப்பதன் மூலம், மறு சுழற்சிக்கு உகந்த பொருட்கள் தனியாக எடுப்பதாலும், மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிப்ப தாலும், குப்பை கொட்டும் வளாகங் களுக்கு செல்லும் குப்பையின் அளவு குறையும் என்பது அரசின் திட்டம். ஆனால் அந்த விதிகள் சென்னையில் பெரும்பாலும் பின் பற்றப்படுவதில்லை. அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் அப் படியே, கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர், நேதாஜி நகர், படேல் நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக்கோளாறு, தொற்று நோய்களால் கடந்த 30 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நேதாஜி நகரைச் சேர்ந்த ஆனந்த் கூறும்போது, “இந்த குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பைகள் அடிக்கடி தீப்பற்றி எரிகின்றன. அதனால் ஏற்படும் புகை எங்கள் பகுதியில் வீசுகிறது. அங்கிருந்து கிளம்பும் சாம்பலும் காற்றில் பரவி எங்கள் பகுதியில் படிகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் அடிக்கடி பல்வேறு சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாததாக உள்ளது” என்றார்.

படேல் நகரைச் சேர்ந்த சிவக்குமார் கூறும்போது, “இந்த குப்பைகளால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் கெட்டுள்ளது. எப்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது, ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. அதனால் பலர் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர். இந்த பிரச்சினை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அறிவியல் முறையில், அங்குள்ள குப்பை அழிக்கப்படும். மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளிப்பதோடு சரி. எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை” என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தி யானந்த் ஜெயராமன் கூறும் போது, “இப்பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். இருக்கும் குப்பையால் காற்று, நிலத்தடிநீர் மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும். அதன் பின்னர் உலகளாவிய தொழில் நுட்பங்களில், அந்த இடத்துக்கு எது பொருந்துமோ, அதன் மூலம் குப்பைகளை அழிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x