

மத்தியில் ஆட்சி அமைக்கும் வகையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள மதிமுக, தொடர்ந்து இரண்டு நாட்களாக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று பேச்சு நடத்தினர். இதையடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பாஜக அலுவலகத்துக்கு சென்று பேச்சு நடத்தினர்.
முன்னதாக நிருபர்களிடம் முரளிதர ராவ் கூறியதாவது:
பாஜக – மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடந்து வருகிறது. சென்னையில் பிப்ரவரி 8-ம் தேதி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெறும்.
நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்று தமிழக மக்களும் விரும்புகிறார்கள். அவர்களது பெரும்பான்மையான பங்களிப்புடன் மாற்றம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் வைகோ கூறுகையில், ‘‘எனது பல ஆண்டுகால அரசியல் அனுபவப்படி சொல்கிறேன், நாடு முழுவதும் வீசும் மோடி அலையால், வரும் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றாலும், அந்த அரசில் கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும் என்று பாஜக மேலிடத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பலரது கணக்குகளை முறியடித்து, பெரும் வெற்றி பெறும்’’ என்றார்.
சுப்பிரமணியசாமி யார்?
பாஜகவில் இணைந்துள்ள சுப்பிரமணியசாமி, தமிழகத்தில் முரண்பாடான கொள்கை கொண்ட கூட்டணி ஏற்பட்டுள்ளதால், அதிமுக 39 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என ட்விட்டரில் கூறியிருந்தது குறித்து வைகோவிடம் நிருபர்கள் கேட்டனர். கோபமடைந்த வைகோ, ‘‘யார் அவர்? பாஜகவில் இருக்கிறாரா? அவரை நான் புறக்கணிக்கிறேன்’’ என்றார்.