

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார் ப.தனபால். துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றார்.
தமிழகத்தில் 15-வது சட்டப்பேரவைக் கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை மே 23-ம் தேதி பதவியேற்றது. புதிய சட்டப்பேரவை கடந்த 25-ம் தேதி கூடியது. பேரவையின் தற்காலிக தலைவர் செம்மலை முன்னிலையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 230 பேரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். பின்னர், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை செம்மலை வெளியிட்டார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது.
இதற்கிடையில், அதிமுக சார்பில் பேரவைத் தலைவர் வேட்பாளராக பி.தன பால், துணைத் தலைவர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டனர். இருவரும் வேட்புமனுக்களை நேற்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தனர்.
பகல் 12 மணி வரை வேறுயாரும் மனுதாக்கல் செய்யாததால், சட்டப்பேரவை தலைவராக பி.தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வாகினர்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர்கள் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
சபாநாயகரை வாழ்த்திப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "நடுநிலை மாறாத தராசு முள் போல் சபாநாயகர் தொடர்ந்து செயல்படுவார் என நம்புகிறேன். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்களைப் போல் செயல்பட வேண்டும்.
ஒரு பக்கம் தேய்ந்தால்கூட நாணயம் செல்லா காசு ஆகிவிடும். அதேபோல் சபாநாயகரின் மரபை காக்கும்படி எதிர்க்கட்சி செயல்படும் என நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் மக்களுக்கு பயன்படக் கூடிய ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். " என்றார்.
'எதிர்க்கட்சிதான் எதிரிகட்சி அல்ல'
சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, அதிமுக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வமும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கையில் அமர வைத்தனர். சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஸ்டாலின், "89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது. சட்டப்பேரவையில் திமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்" என்றார்.