Published : 18 Apr 2017 08:39 PM
Last Updated : 18 Apr 2017 08:39 PM

உளவுத்துறை ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தி நியமனம்

தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தியை மீண்டும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்தபோது உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் கே.என்.சத்தியமூர்த்தி. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 6-ம் தேதி முதல் திடீரென விடுப்பில் சென்றார் சத்தியமூர்த்தி. பிப்ரவரி 13-ம் தேதி உளவுத்துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். சத்தியமூர்த்தியை காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புதிய முதல்அமைச்சராக பொறுப்பேற்றார். உடனே, பிப்ரவரி 23-ம் தேதி தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை சென்னை காவல் துறை நலவாழ்வு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்தனர். உளவுத்துறை ஐ.ஜி பதவி காலியாகவே இருந்தது. பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கே.என்.சத்தியமூர்த்தியை தமிழக உளவுத்துறை ஐ.ஜியாக மீண்டும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x