

ஆண்மைக்குறைவு இருப்பதை மறைத்து திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் கணவர் வீட்டினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணவன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மையால் மணமுறிவு ஏற்படுவதைத் தடுக்க, ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதை ஏன் கட்டாய மாக்கக்கூடாது என விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசு களுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
இந்த வழக்கில், திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்குவது சாத்தியமற்றது என்றும், இது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூத்த மண்டல இயக்குநர் பதில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை சம்பந்தப்பட்ட தனிநபரின் முன்அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
இது தொடர்பாக சட்டம் கொண்டுவருவதாக இருந்தால் சட்டத்துறைதான் முடிவு செய்ய முடியும். மேலும், ஆண்மைக் குறைவு மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, உண்மை யை மறைத்து திருமணம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பது குறித்து சுகாதாரத்துறை முடிவெடுக்க முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய சட்டத்துறை செயலரை 5-வது எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையை கட்டாயப்படுத்தி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பதிலளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.