Published : 28 Jan 2014 08:09 PM
Last Updated : 28 Jan 2014 08:09 PM

நெல்லை: சிறுமியின் சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் திரட்டிய மாணவர்கள்

ரத்த சிவப்பணு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அறுவைச் சிகிச்சைக்கு, பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ரூ.3 லட்சம் நிதி வழங்கி, நெகிழ வைத்தனர். திருநெல்வேலி மீனாட்சிபுரம், மேலவீரராகவபுரத்தைச் சேர்ந்த முருகன்- ராஜேஸ்வரி தம்பதியின் மகள் இசக்கியம்மாள் (14). திருநெல்வேலி சந்திப்பு நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிறந்த 3-வது மாதத்தில் இருந்து நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவருக்கு ரத்த சிவப்பணுக்கள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நோயை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு ரூ. 14 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளியான முருகன் குடும்பத்தினர் இத்தொகையை திரட்ட முடியாமல் திணறி வருகின்றனர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மருத்துவச் சிகிச்சைக்கு உதவி அளிக்கும்படி இசக்கியம்மாளும், அவரது பெற்றோரும் மனு அளித்து வருகிறார்கள். அதன்படி, பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட ரூ.3 லட்சத்துக்கான காசோலையை, பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாணவி இசக்கியம்மாளிடம், பள்ளித் தாளாளர் வெரோனிகா ஜெயராஜ் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜாய் பெஞ்சமின் செய்திருந்தார்.

ஆங்கில வடிவில்: >This teenager needs help to live

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x