

மதுரை தமுக்கம் மைதானத்தில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமுக்கம் மைதானம் மட்டுமின்றி பெரியார் பேருந்து நிலையம், தே.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செல்லூர் அருகே ரயிலை சிறைபிடித்து தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டம் தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. நேற்று சாரல் மழை பெய்தபோதும் கூட்டம் கலை யவில்லை. பொதுமக்கள் பலர் குடைபிடித்துக்கொண்டு போராட் டக்களத்துக்கு வந்தனர். நேற்று மாலையில் மழைபெய்தபோதும் கூட்டம் கலையவில்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். மக்கள் முன்னிலையில் சிலம்பம், பறை போன்ற கலைகள் அரங்கேற்றப் பட்டன. நேற்று சிறுவர்கள் நாட்டுப்புற நடனமாடியபடி தமுக்கம் மைதானத்துக்கு வந்தனர். சாப்பிட்ட தட்டு, தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை தன்னார்வலர்களே அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை மையப்படுத்தி மட்டுமே தொடங்கிய போராட்டம், தற்போது பெரும் எழுச்சியாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆங் காங்கே சிறு சிறு குழுக்களாக இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் தமிழர் உரிமை, முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களின் குளிர் பானங்களை புறக்கணிக்க வேண்டும். தற்சார்பு விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலர் பேசினர். ஜல்லிக்கட்டு தடையின் பின்னால் உள்ள அரசியல் குறித்தும், இந்த விவகாரத்தில் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என்பதையும் வலியுறுத்தினர்.
பள்ளி, கல்லூரி அளவில் பேசுவதற்கே தயங்கியவர்கள் கூட தாங்களாக முன்வந்து தங்களுக்கு தெரிந்த விவர ங்களை தெரிவித்தனர். தொடர்ந்து சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக போராட்டம் என்றாலே ஒதுங்கிப் போகும் பெண்கள், தமுக்கம் மைதானம் முன் நடைபெற்ற இளைஞர்களின் அமைதிப் போராட்டத்தில் அலை அலையாக திரண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உற்சாகமாக கோஷமிட்டனர்.
‘அவசர சட்டம் நிரந்தர தீர்வு கிடையாது’
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்த பின் இயக்குநர் தங்கர் பச்சான் பேசியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் மிகவும் தெளிவாக உள்ளனர். தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் நிரந்தரத் தீர்வு கிடையாது. எனவே, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட கூடாது. 5 நாட்களாக போராட்டம் நடத்தியும் கூட எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளையும் மத்திய அரசு செவிகொடுத்து கேட்கும் வரை மாணவர்கள் போராட வேண்டும் என்றார்.