Last Updated : 01 May, 2014 10:02 AM

 

Published : 01 May 2014 10:02 AM
Last Updated : 01 May 2014 10:02 AM

சுதாகரன் திருமண இசை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கவில்லை: ஜெ.வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது நாளாக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இறுதி வாதம் புதன்கிழமையும் தொடர்ந்தது. அப்போது சுதாகரன் திருமணத்திற்கு பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம்

தனது இறுதிவாதத்தை தொடர்ந்த பவானி சிங், சென்னையைச் சேர்ந்த வருமான வரி இணை ஆணையர்கள் சீனிவாசன், சுப்பாராவ், சீத்தாராமன் ஆகியோர் அளித்த 76 பக்க வாக்குமூலத்தை வாசித்தார்.

1988 முதல் 1991-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு இடங்களில் வாங்கிய வீடு, பங்களா, தோட்டம், எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் தொடர்பாக தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை தேதி வாரியாக குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து 8.9.1995 அன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை பவானி சிங் வாசித்தார். ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏ.ஆர்.ரகுமான் அவ‌ரை சந்தித்தார்.

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தில், ''சுதா கரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகில் மிக மூத்த கலைஞரின் குடும்பவிழா என்பதால், பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதாவின் வீட்டி லிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்குமச் சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்'' என கூறியுள்ளார்.

நிலம் வாங்கிய ச‌சிகலா

தஞ்சாவூரைச் சேர்ந்த சார்பதிவாளர் நஜூமுதின் மற்றும் சென்னையைச் சேர்ந்த‌ துணை சார்பதிவாளர்கள் ஜெயராமன், கோவிந்தராஜ், கோவை ராமநாதன் அளித்த வாக்குமூலத்தை பவானி சிங் வாசித்தார். அதில், ‘சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக சசிகலா சென்னை, தஞ்சாவூரில் 30 இடங்களில் சொத்துக்களை வாங் கினார்.

பல கோடி மதிப்பிலான சொத்துக் களை சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தாள் களையும் குறைந்த விலையில் பயன்படுத்தியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள் ளது என பவானி சிங் குறிப்பிட்டார்.

ரூ.3 கோடி மின்சார பணிகள்

அதனைத் தொடர்ந்து திருத்துவராஜ் என்கிற மின்சாரத்துறை பொறியாளர் கொடுத்த வாக்குமூலத்தை நீதிபதி டி'குன்ஹாவிடம் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தாக்கல் செய்தார். அதில், ‘‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரம் செலவில் மின்சார பணிகளை செய்தேன். அதேபோல சிறுதாவூர் பங்களாவில் ரூ.17.50 லட்சம் செலவிலும், பையனூர் பங்களாவில் ரூ.31.13 லட்சம் செலவிலும் மின்சார பணிகள் நடைபெற்றுள்ளன.

மேலும் நமது எம்ஜிஆர், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் அலுவலகங்களில் ரூ.47.75 லட்சம் செலவிலும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான மற்ற கட்டிடங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமாக மின்சார பணிகளையும் செய்தேன்'' என கூறப்பட்டுள்ளது.

இறுதி வாதம் 5-ம் தேதி தொடரும்

அரசு வழக்கறிஞர் பவானி சிங், 224 அரசுத் தரப்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இறுதி வாதம் நிகழ்த்தினார். நீதிபதி டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x