மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: வெங்கய்ய நாயுடு தகவல்

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: வெங்கய்ய நாயுடு தகவல்
Updated on
2 min read

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு மத்திய அரசு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்து உள்ளார்.

சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று பகல் 11.59 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண் டனர். மெட்ரோ ரயில் சேவையை முதல் வர் தொடங்கி வைத்தபோது, மத்திய அமைச்சர்கள் விமான நிலையத்தில் இருந்தபடி கொடியசைத்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முதல் ரயிலை அம்சவேணி என்ற பெண் ஓட்டி னார். பகல் 12.08 மணிக்கு கிளம்பிய 2-வது மெட்ரோ ரயிலில் வெங்கய்ய நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் உட்பட பலர் பயணம் செய்தனர்.

முன்னதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

சென்னை நகரில் மக்கள் தொகை யும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை மக்களின் போக்குவரத்து வசதிக்கு மிகவும் பய னுள்ளதாக இருக்கும். மொத்தமுள்ள 45 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதலா வது கட்டப் பணியில் சுமார் 19 கி.மீ சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களை இணைப்பதாக உள்ளது. இது விமான நிலையம் வந்து செல்லும் பயணி களுக்கு வசதியாக இருக்கும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு தடையற்ற பயணம் மேற்கொள்ள ஏதுவாக ரூ.400 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையமானது, சென்னையில் பொருளாதார மற்றும் போக்குவரத்து தேவைகளை நிறை வேற்றும்.

4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலின் பயணத்தில் 16 பேருந்துகள், 300 கார்கள், 600 மோட்டார் சைக்கிள்களின் தேவையை நிறைவேற்றும். சென்னையில் மெட்ரோ ரயிலின் முதல்கட்ட பணிகளுக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி அளித் துள்ளது. இந்த பணிகள் ஒட்டுமொத்த மாக நிறைவடையும்போது, தினமும் 7.75 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மீதியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் ஆறு நகரங்கள் நவீன நகரங்களாக உரு வாக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான முதல்சுற்றில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நேற்று (நேற்று முன்தினம்) அறிவிக்கப்பட்ட 2-வது சுற்றில் மதுரை, சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகியவையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஏற் கெனவே நவீன நகரத் திட்டங் களுக்கென மொத்த முதலீடாக சென்னைக்கு ரூ.1,366 கோடியும், கோயம்புத்தூருக்கு ரூ.1,570 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கென இதுவரை ரூ.7,082 கோடி மதிப்புள்ள 39 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் வழங்கலுக்கு ரூ.4,927 கோடியும், கழிவுநீர் அகற்றலுக்கு ரூ.2,008 கோடியும், பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்காக ரூ.147 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in