தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி: சோனியா காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி: சோனியா காந்தியுடன் குஷ்பு சந்திப்பு
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிப் பணிகள் முடங்கியுள்ளன.

தமிழகத்தைப் போல உத்தரப்பிரதேசம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதிய தலைவர்களை நியமிக்க கடந்த ஒரு மாத காலமாக கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு உத்தரப்பிரதேச மாநிலத் தலைவராக ராஜ்பப்பர் அறிவிக்கப்பட்டார். தமிழகத் தலைவர் அறிவிக்கப்படவில்லை.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “தமிழகத் தலைவரை தேர்வு செய்வதில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. தலைவராக விரும்பும் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை எதிர்த்தரப்பினர் முன்வைக்கின்றனர். காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக கே.ஆர்.ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக நியமிப்பதை மூத்த தலைவர்கள் எதிர்க்கின்றனர். திருநாவுக்கரசர் அதிமுக, பாஜகவில் இருந்து வந்தவர் என்கிறார்கள், பீட்டர் அல்போன்ஸை தமாகாவில் இருந்து வந்தவர்கள் என்கிறார்கள். இதனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. விரைவில் தமிழகத் தலைவர் அறிவிக்கப்படுவார்” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை தலைவராக்க விரும்புவதாகவும், அதற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தானே தலைவராக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் மாநிலங்களவை உறுப்பினராகி இருப்பதால் அவரை மாநிலத் தலைவராக்க சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் ராகுல் காந்தியை சந்தித்த காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, நேற்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பதை சோனியா காந்தி அறிவிப்பார். இளங்கோவன் போன்ற வலிமையான தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இளங்கோவன் உட்பட யாருக்காவும் நான் சிபாரிசு செய்யவில்லை’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனத்தில் இழுபறி நீடிப்பதால் அக்கட்சியினர் சோர்வடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in