

பெரும்பாலான தனியார் நிறுவன பாலில் ரசாயனக் கலப்பு இருக்கிறது என்ற தன்னுடைய புகார் தவறென்று நிரூபிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று தமிழக கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரசாயனக் கலப்பில்லை என்று அவர்கள் நிரூபித்தால் நான் ராஜினாமா செய்யத் தயார், என்னைத் தூக்கில் போடக்கூடத் தயாராக இருக்கிறேன், ரசாயனக் கலப்பில்லை என்று அவர்கள் நிரூபிக்க முடியுமா?
சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் பால் கெடாமல் இருக்க ரசாயனக் கலப்பு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரசாயனக் கலப்பு செய்வது கூடாது.
சில பிராண்ட்களில் இல்லை, ஆனால் பெரும்பாலான பிராண்ட்களில் இந்த ரசாயனக் கலப்பு உள்ளது.
நான் இதைக்கூறும்போது நான் மக்களிடையே பீதியைக் கிளப்புகிறேன் என்று கூறப்படுகிறது, ஆனால் ஒரு அமைச்சராக நான் மக்களை எச்சரிப்பது கடமை அல்லவா?” என்றார்.