

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் விவரம்:
அந்தத் தீர்மானத்தில், 'இலங்கை நாட்டில், நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும், வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தும் தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு முற்றிலும் முரணான வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு செல்கிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை, மனிதநேயம் அற்ற செயலை, இந்தியா ஏற்றுக் கொள்கிறது, அங்கீகரிக்கிறது என்ற நிலை தான் உருவாகும்.
இது மட்டுமல்லாமல், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக, அதாவது Chair-in-Office ஆக இலங்கை அதிபர் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்ற தீராப் பழிச் சொல் இந்தியாவிற்கு ஏற்படும். இப்படிப்பட்ட, தீராப் பழிச்சொல் இந்திய நாட்டிற்கு ஏற்படுவதை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.
எனவே, தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கை நாட்டில் 13.11.2013 அன்று நடைபெறவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான கூட்டத்திலோ, 15.11.2013 முதல் 17.11.2013 வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலோ பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.' என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா காட்டம்
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, "காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்க வழி வகுத்துள்ள >மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி" என்ற முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பேசினார்.
முதல்வரின் உரையைத் தொடர்ந்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தத் தீர்மானம் தொடர்பாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர், இந்தத் தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியா பங்கேற்பு... பேரவை அவசரக் கூட்டம்
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது. பின்னர் பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு ஜனவரி மாதத்தில்தான் பேரவை மீண்டும் கூடும். அதன்படி, ஆளுநர் உரையாற்றுவதற்காக ஜனவரி மூன்றாவது வாரத்தில் தான் பேரவை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை இன்று அவசரமாக கூடும் என்று பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேற்று அறிவித்தார்.
கடந்த மாதம் முடிந்த மழைக்கால கூட்டத் தொடரின் 2-வது நாளில், 'இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பெயரளவுக்குக்கூட இந்தியா பங்கேற்காமல் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்றும் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மட்டுமின்றி இந்தியா தரப்பில் ஒருவர்கூட பங்கேற்கக் கூடாது என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்ப முடிவு செய்திருப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் மேற்கொண்டன. இந்நிலையில், சட்டப்பேரவையின் அவசரக் கூட்டம் இன்று மாலை கூட்டப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி சட்டப்பேரவையின் ஒருநாள் அவசரக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.