Last Updated : 14 Mar, 2014 12:00 AM

 

Published : 14 Mar 2014 12:00 AM
Last Updated : 14 Mar 2014 12:00 AM

அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிப்பில் ஈடுபட்ட பெண்கள் நீக்கம்: இயந்திரங்கள் மூலம் சப்பாத்தி தயாரிப்பு

அம்மா உணவகங்களுக்கான சப்பாத்திகள் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுவதால், சென்னை மாநகராட்சியின் 5 மண்டல அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் 203 அம்மா உணவகங்களில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் சப்பாத்தி விற்பனை நடந்து வருகிறது. இதற்காக, ஏற்கெனவே 14 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் 14 மண்டலப் பகுதிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டன. ஆனால், அந்த இயந்திரங்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தரமான சப்பாத்திகளை தயாரிக்க வில்லை.

எனவே, சப்பாத்தி தயாரிக்கும் பணிக்காக ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் கூடுதலாக 8 பேர் என, 203 அம்மா உணவகங் களுக்கு 1,624 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

அதேசமயத்தில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களுக் கான ஒப்பந்தங்களை ரத்து செய்த சென்னை மாநகராட்சி, சொந்தமாக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை வாங்க முடிவு செய்தது.

அதன்படி சப்பாத்தி இயந்திரங் களை கொள்முதல் செய்ய தொடங்கியதன் விளைவாக, முதல் கட்டமாக ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் சப்பாத்தி இயந் திரங்கள் நிறுவப்பட்டன. எனவே, கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து ராயபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டல அம்மா உணவகங்களில் இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி விற்பனை நடந்து வருகிறது.

இதனால் ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிப்பில் ஈடுபட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வியாழக்கிழமை நீக்கப்பட்டனர். பணி நீக்கப்பட்டுள்ளவர்கள் கூடுதலாக தொடங்கப்பட உள்ள அம்மா உணவகங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x