Published : 28 Sep 2016 08:38 AM
Last Updated : 28 Sep 2016 08:38 AM

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் நேரடி விவாதம்: சென்னை மாணவர்களை கவர்ந்த ஹிலாரி - டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக பேசுவதாகவும் பாராட்டு

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் டொனால்டு டிரம்ப்பை விடவும் ஹிலாரி கிளிண்டனே சென்னை கல்லூரி மாணவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார். எனினும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதாக டிரம்பையும் மாணவர்கள் பாராட்டினர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகிறார்கள். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதன் வீடியோ பதிவு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் சார்பில் லயோலா கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகளுக்குக் காண்பிக்கப்பட்டது. அமெரிக்கா வில் வேலைவாய்ப்பு, பொருளா தாரம், பாதுகாப்பு, ஈராக் போர், அணுஆயுதங்கள் விவகாரம் என பல்வேறு தலைப்புகளில் இரு வேட்பாளர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

அதெனா இன்போனாமிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நேரடி விவாத நிகழ்ச்சியை சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து, இரு வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் குறித்த கலந்துரையாடல் நடந்தது. இதை அதெனா இன்போனாமிக்ஸ் ஆலோசகர் கமோடர் ஆர்.எஸ்.வாசன், அமெரிக்க துணை தூதரக பொது விவகாரங்கள் அதிகாரி ஏரியல் எச்.போலாக் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

விவாதத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்தனர். டொனால்டு டிரம்ப்புக்கும் கணிசமான ஆதரவு இருந்தது. ஹிலாரி கிளிண்டன் தனது கருத்துகளை முன்வைத்த விதம், புன்னகையோடு விவாதத்தில் பங்கேற்ற முறை, அதிபர் பதவிக்குரிய அரசியல் முதிர்ச்சியோடு பேசிய விதம், எதிர் வேட்பாளர் டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முறை போன்ற அம்சங்கள் தங்களை பெரிதும் கவர்ந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

ஹிலாரியைப் போன்று எந்த அரசியல் அனுபவமும் இல்லாத வர்த்தகரான டொனால்டு டிரம்ப் இயல்பாக பேசியது பிடித்திருந்ததாக ஒருசிலர் கூறினர்.

லயோலா கல்லூரி மாணவர் ஆலோசகர் பிரின்ஸ் கூறும்போது, “ஹிலாரி அமைதியை விரும்புகிறார், அமெரிக்காவுக்கு, உலக நாடுகளுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்று நினைக் கிறார். ஆனால், அடிப்படையில் வர்த்தகரான டொனால்டு டிரம்ப் வியாபாரி போல் பேசுகிறார். மற்ற நாடுகளுடன் நல்லுறவு இருந்தால்தான் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட் களை வெளிநாடுகளில் விற்க முடியும் என்ற ரீதியில் ஹிலாரி யோசிக்கிறார். அதுபோன்ற நல்லுறவு இல்லாத சூழலில் எப்படி அமெரிக்க பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்ய முடியும்?” என்றார்.

சீன கல்வி மைய ஆய்வு அதிகாரி வித்யாபதி கூறும்போது, “அடிப்படையில் ஹிலாரி ஓர் அரசியல்வாதி. ஏற்கெனவே அமெ ரிக்க வெளியுறவுத்துறை அமைச்ச ராக இருந்துள்ளார். அந்த அரசியல் அனுபவத்துடன் அரசு ரீதியாக கருத்துகளை முன்வைக்கிறார். ஆனால், டொனால்டு டிரம்ப் எந்தவிதமான ஒளிவுமறைவு இல்லாமல் மனதில் படுவதை வெளிப்படையாக பேசுகிறார். அவரது பேச்சு இதயத்தின் ஆழத்தில் இருந்து வருகிறது. அதேநேரத்தில் ஹிலாரியின் பேச்சு, செயற்கைத்தனமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x