

திருப்பரங்குன்றம் பகுதியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால தாமிரப் பட்டயம் ஒன்று தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொல்லியல் துறை மண்டல இயக்குநர் நா.கணேசன் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் கி.பி. 1513-ம் ஆண்டு ஆடி மாதம் 15-ம் தேதி காவல் காணியாட்சி வழங்கியதற்கான குறிப்பு எழுதப்பட்ட தாமிரப் பட்டயம் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் முதல் பக்கத்தில் 31 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 19 வரிகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. இதில், பெரிய வீரப்பநாயக்கர் ஆட்சியில் முருகன் கோயில் திருப்பணிக்காக 170 மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியில் சென்ற அந்த மாடுகளை பெரிய பணிக்கன், சின்னப் பணிக்கன், பேரிச்சியா தேவன், கட்டையத் தேவன் ஆகியோரை மீட்டு வருமாறும், அதற்காக அவர்களுக்கு கூலியாக மாடு ஒன்றுக்கு ஒரு கலம் நெல் வீதம் 170 கலம் நெல்லும், அம்பலக்காரனுக்கு 20 கலம் நெல்லும் என மொத்தம் 190 கலம் நெல் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் கூறியபடி கூலி கொடுக்க முடியாததால் 4 பேருக்கும் காணியாட்சி காவல் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாடக்குளம், பெரிய வீரமுடையான், அய்யாப்பட்டிக்கு வடக்கு, சதுர்வேதிமங்கலம் ஆகிய நான்கு எல்லைக்குட்பட்ட திருமலைக்குளம் பகுதியை நால்வரும் காவல் புரிய வேண்டுமென்றும், அதற்காக காணி ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லும், ஒரு கட்டு நெற்கதிரும், ஒரு வீட்டுக்கு ஒரு பணமும், ஒரு மண்டபத்துக்கு ஒரு பணமும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை நான்கு பேரும் பிரித்துக் கொள்ள வேண்டும்.
மேலும், திருமலைக்குளம் பகுதியில், களவு போனால் காவல் பணி மேற்கொள்பவர்களே பொறுப்பாக வேண்டும். அதற்கு ஈடாக கோயிலில் எண்ணெய் பானை தூக்குதல், தீப்பந்தம் தூக்குதல், குடைபிடித்தல், கோயில் மாடுகளை பராமரித்தல், கார்த்திகை தீபம் கொளுத்துதல் போன்ற கோயில் ஊழியங்களை செய்ய வேண்டும். இந்த வேலைகளுக்காக அவர்களின் வீடுகளில் நடைபெறும் நல்ல, கெட்ட காரியங்களுக்கு 5 பணம் கொடுக்க வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு காணியாட்சி காவல் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த காவல் உரிமையை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அவையத்தார் சிவாதராயர், பொன்னம்பல பட்டர், விருமாதிராயர், திருப்பரங்குன்றம் முதலியார், திருப்பரங்குன்றம் பெரிய நாட்டாண்மை ஆண்டியப்ப பிள்ளை ஆகியோர் வழங்கியுள்ளனர் என்பதற்கான அறிவிப்பு அந்த தாமிரப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருப்பரங்குன்றம் கோயில் கணக்கர் இருளப்பராயர் எழுதியுள்ளார் என்பது ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது என்று கூறினார்.