

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரித்துறையினரின் வழக்கு விசாரணையை வருகிற 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993-94ம் ஆண்டுக்கான ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமான கணக்கையும் தாக்கல் செய்யவில்லை' என்று ஜெயலலிதா, சசிகலா மீது வருமானவரித் துறையினர் 1996-ம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள், ‘வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததற்கான அபராத தொகையை செலுத்த தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஒரு மனுவை கொடுத்துள்ளோம். இந்த மனு மீது வருமானவரித்துறை இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அதுவரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்' என்று வாதாடினர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், வருகிற அக்டோபர் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.