Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM

வெள்ளி விழா கொண்டாடும் ‘டி.யு.142 எம்’ போர் விமானங்கள்

இந்திய கடற்படைக்கு முக்கியமான பங்களிப்பை அளித்து வரும் ‘டி.யு.142 எம்’ ரக போர் விமானங்கள், இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுகின்றன. இதையொட்டி,‌ அரக்கோணம் போர் விமானத் தளத்தில் நடந்த விழாவில், சிறப்பு தபால் தலையை கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி அனில் சோப்ரா வெளியிட்டார்.

1942-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டது அரக்கோணம் போர் விமானத் தளம். போர் முடிந்த பிறகு பயனற்றுக் கிடந்த இந்தத் தளம், நாடு சுதந்திரம் அடைந்ததும் இந்திய விமானப் படையின் கீழ் வந்தது. விமானப் படையிடம் இருந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள், 1976-ம் ஆண்டு இந்திய கடற்படைக்கு மாற்றப்பட்டன. அப்போது கடற்படையிடம் ஐந்து ‘சூப்பர் கான்ஸ்டெல்லேஷன்’ ரக விமானங்கள் இருந்தன. செயல்பாட்டுத் திறன் குறைந்ததால் 1983-ம் ஆண்டு அந்த விமானங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

எனினும் 7,516 கி.மீ. நீளமுள்ள நாட்டின் கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்கவும் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தவும் 1987- ம் ஆண்டு அன்றைய சோவியத் யூனியனிடம் இருந்து ‘டுபோலெவ் 142 எம்’ ரக விமானங்கள் வாங்கப்பட்டன. ஆரம்பத்தில், கோவாவில் உள்ள ஹன்ஸா கடற்படைத் தளத்தில் சிறிதுகாலம் இயங்கிய இந்த விமானங்கள், 1992-ல் அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படைத் தளத்துக்கு மாற்றப்பட்டன. கடற்படையில் ‘டி.யு. 142 எம்’ ரக விமானங்கள் செயல்படத் தொடங்கி, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதையொட்டி, வெள்ளிவிழா கொண்டாட்டங்கள், அரக்கோணம் கடற்படைத் தளத்தில் திங்கட்கிழமை நடந்தன. இதில் கலந்து கொண்ட கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி அனில் சோப்ரா, சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். பின்னர், பத்திரிகையாளர்களிடையே பேசிய சோப்ரா, ‘‘இந்த விமானத் தளத்தை இன்னும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக நிலங்கள் ஒதுக்கித்தர கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளோம்’’ என்றார்.

இந்திய கடற்படையிடம் தற்போது எட்டு ‘டி.யு.142 எம்’ ரக விமானங்கள் உள்ளன. அதில் ஒன்று செயலிழந்துவிட்டது. இன்னொன்று, பழுதடைந்து சரிசெய்யும் பணியில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 விமானங்கள் அரக்கோணம் தளத்தில் உள்ளன. இந்த விமானங்கள் சுமார் 28 ஆயிரம் மணி நேரங்கள் ரோந்துப் பணியில் பறந்து சாதனை படைத்துள்ளன. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, உலகில் இந்த ரக போர் விமானங்களை இயக்கும் நாடு இந்தியாதான்.

மேலும் இந்த விமானங்களின் இருப்பிடமான அரக்கோணம் கடற்படைத் தளத்தில்தான் ஆசியாவிலேயே மிக நீளமான விமான ஓடுபாதை உள்ளது. சுமார் 2,320 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த விமானத் தளம், இந்தியாவில் உள்ள போர் விமானத் தளங்களில் மிகப் பெரிதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x