

முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஊர் கூடி கல்வி சீர்வரிசை வழங்கினர். இதன்படி ஸ்மார்ட் வகுப்புக்கான தொடுதிரை கற்றல் வசதி உபகரணத்தை அவர்கள் சீர்வரிசையாக வழங்கினர். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 360 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஊர்கூடி சீர்வரிசை வழங்கும் நூதன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஊர் மக்கள் மற்றும் பெற்றோர் இணைந்து கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக ஊர்வல மாகச் சென்று பள்ளிக்கு அளிப்பார்கள்.
இந்த நடைமுறையால் பள்ளி நவீனமாவதுடன் குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு கிராம மக்கள் மற்றும் பெற்றோர் தலைமையில் ஊர்கூடி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில், தனியார் மெட்கு லேஷன் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தொடுதிரை மூலம் கற்கும் வகையில், தொடு திரை (ஸ்மார்ட் பலகை) சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
முன்னதாக அங்குள்ள அம்மன் கோயிலில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள தொடுதிரை, அவற்றுக்கான கணினி மற்றும் உபபொருட்களை கிராம பொதுமக்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்துச் சென்று வழங்கினர்.
அங்கு, தொடுதிரை மூலம் கற்றல் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி, எஸ்எஸ்ஏ திட்ட அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது: தொடுதிரை கல்வி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், அரசு பள்ளி மாணவர்கள் மேம்படுத்தப்பட்ட சிறந்த கல்வியை கற்க முடியும். கல்வித்துறை பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினாலும் பெற்றோரும் தங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வழங்குவதற்காக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும். இது மாதிரியான நிகழ்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம், மாணவர்கள் மத்தியிலும் கல்வியின் அவசியம் புரிந்து, கற்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.கமலக் கண்ணன் கூறும்போது, ‘பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளியின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன்படி, பள்ளியில் வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் தங்களின் பாடங்களில் உள்ள பல்வேறு சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளுக்கு, இணையதளத்தை பயன்படுத்தி தெளிவு பெற முடிகிறது’ என்றார்.