என்எல்சி நிறுவனத்தின் முழு செலவில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சூரியஒளி தகடுகள் மூலம் மின் உற்பத்தி: முதல்வர் நாராயணசாமி தகவல்

என்எல்சி நிறுவனத்தின் முழு செலவில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சூரியஒளி தகடுகள் மூலம் மின் உற்பத்தி: முதல்வர் நாராயணசாமி தகவல்
Updated on
2 min read

நாட்டிலேயே முதன்முறையாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முழு உதவியுடன் புதுச்சேரி கடற்கரை சாலையில் சூரியஒளி தகடுகள் பொருத்தப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரிக்கு தற்போது 450 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஒடிஷா தளபாரா அனல்மின் நிலையம் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் புதுவைக்கு ஒதுக்க கோரியுள்ளோம். கூடுதல் மின்சாரம் கிடைத்தால் புதுவையில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஏதுவாகும். வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க வசதி செய்ய மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 70 சதவீதம் நிதியும் ஒதுக்கும்.

ஜெர்மன் நாட்டில் இருப்பதைப்போல் புதுச்சேரி கடற்கரை சாலையில் சோலார் பேனல்களை பதித்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நெய்வேலி என்எல்சி நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதற்கான ஆயத்த பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிஎஸ்ஆர் திட்டப்படி இப்பணி நடக்க உள்ளது. முழு நிதியையும் என்எல்சி ஏற்கிறது.

ஏப்ரல் மாதம் முழு பட்ஜெட்

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் ரூ.250 கோடியை மாநில அரசு தந்துள்ளது. இதை மத்திய அரசு ஈடுசெய்ய வேண்டும். திட்டக்குழுவிடம் பேசி முடிவு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி ஏப்ரல் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

50 சதவீதம் வருவாய்

சரக்குகளை கையாள்வது தொடர்பாக கடந்த 15-ம் தேதி சென்னை துறைமுகம் - புதுச்சேரி துறைமுகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சென்னையில் வந்து இறங்கும் சரக்குகள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும். முதல் வருடத்தில் 4 லட்சம் மெட்ரிக் டன், இரண்டாம் வருடத்தில் 10 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்படும். இதன் மூலம் வரும் வருமானத்தில் 50 சதவீதம் சென்னை துறைமுகமும், 50 சதவீதம் புதுச்சேரி துறைமுகமும் பகிர்ந்து கொள்ளும்.

புதுவை துறைமுகத்தில் முகத்துவாரத்தை ஆழப்படுத்துவது தொடர்பாக பணிகளை செய்ய வேண்டும் என கோரியதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றுக் கொண்டார்.

புதுவை துறைமுகத்தில் கட்டமைப்பு வசதிகளை செய்ய சென்னை துறைமுகம் மூலம் ரூ.50 கோடி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி பகுதியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் மையத்தை புதுச்சேரியில் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறோம். துறைமுகத்தை இயக்குவதின் மூலம் ஆண்டொன்றுக்கு புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.300 முதல் ரூ.400 கோடி வருமானம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

புதுவை - திருப்பதி - ஹைதராபாத் இடையே சேவை ஸ்பைஸ் ஜெட் மூலமும், சென்னை - புதுச்சேரி - சேலம் - பெங்களூரு - சேலம், புதுச்சேரி - சென்னை இடையே ஒடிஷா ஏவியேஷன் மூலமும் விமானப் போக்குவரத்து சேவையை தொடங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. விரைவில் புதுவையில் இருந்து கோவை, கொச்சின், திருச்சி, போன்ற நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in