Published : 29 Mar 2017 08:32 AM
Last Updated : 29 Mar 2017 08:32 AM

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கையெழுத்திட்ட மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்: நெடுவாசல் விவசாயிகள் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தெரிவித் துள்ள மத்திய அரசைக் கண்டித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தை கைவிடக்கோரி பிப்.16-ம் தேதி நெடுவாசலில் போராட்டம் தொடங்கியது. இத்திட் டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி மொழியையும், மத்திய அரசின் வேண்டுகோளையும் ஏற்று மார்ச் 9-ம் தேதி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் அளித்த உறுதி மொழியை ஏற்று, வடகாடு, நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு ஆகிய இடங்களில் நடந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

அதன்பின், நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மார்ச் 27-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதற்கிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு 10 ஏக்கர் நிலம் கொடுத்த நெடுவாசல் விவசாயிகள் எ.ஆர்.கருப்பையன், வி.அருணா சலம், கே.பாமா, ஆர்.சுகுமாறன், வி.செந்தில்குமாரி, ஆர்.சந்திர போஸ் ஆகியோர், தங்களது நிலத் தைத் திருப்பித் தருமாறு புதுக் கோட்டை ஆட்சியர் சு.கணேஷை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அப்போது, இந்த நிலங்களை விடு விக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளிக்கப் படாது என்றும் ஆட்சியர் உறுதி யளித்தார்.

இதுகுறித்து ஆட்சியரைச் சந்தித்த நெடுவாசல் கிராமத்தினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்கள் எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் மீது மத்திய அரசுக்கு அக்கறையின்மையை காட்டுகிறது. எனவே, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுடன் ஆலோசனை செய்த பின், ஒரு வாரத்தில் மீ்ண்டும் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார்.

தொடர் போராட்டம்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட மைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டக் களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு துணை நிற் கும் வகையில் மார்ச் 29-ம் தேதி (இன்று) முதல் காவிரி டெல்டா முழுவதிலும் தொடர் போராட் டங்களை நடத்த உள்ளோம். இன்று மயிலாடுதுறையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இரா.முத்தரசன் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் 31 இடங்களில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் இடம் பெற் றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நெடுவாசல் போராட்டக் குழுவினருக்கு கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான செயலாகும்.

மத்திய அரசு நயவஞ்சகமான முறையில் மக்களை ஏமாற்ற முயற்சிப்பது நாகரிகமான செயல் அல்ல. ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் இடங்களின் பட்டியலில் இருந்து நெடுவாசல் கிராமத்தை நீக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x