

தமிழக காங்கிரஸ் தலைவராக சு.திரு நாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கே.ரகுமான் கான், காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தேசிய செயலாளர் சின்னா ரெட்டி ஆகிய 5 பேர் மேலிடப் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 14-ம் தேதி புதிய தலைவராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார்.
திருநாவுக்கரசர் பதவியேற்ற பிறகு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி, மகளிரணி என துணை அமைப்புகளின் நிர்வாகி களை தனித்தனியாக சந்தித்து ஆலோ சனை நடத்தினார். மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கமிட்டி நிர்வாகிகளையும் அவர் சந்தித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடை பெறுகிறது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
வழக்கமாக மாநில செயற்குழு கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் களாக ஒருவர் அல்லது 2 பேர் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். ஆனால், முதல் முறையாக மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உட்பட 5 பேர் பங்கேற்கின்றனர். மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து அடுத்தகட்டமாக நடத்த வேண்டிய போராட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவால் அதிமுக தலைமையில் மாற்றம் ஏற்பட்டு சசிகலா பொதுச்செயலாளர் ஆகியுள் ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டுள்ளதால் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளான அதிமுக, திமுகவில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றத்தால் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் சிந்திக்கவில்லை. இதனால் திமுக கொடுப்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்போது காங்கிரஸுக்கு அதிமுக, திமுக என 2 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாதகமான அரசியல் சூழலை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதற்காக டெல்லியில் இருந்து 5 பார்வையாளர்கள் வருகின்றனர்’’ என்றார்.