டெல்லி பேரவைத் தேர்தலில் தேமுதிக போட்டி: 5 வேட்பாளர்கள் அறிவிப்பு

டெல்லி பேரவைத் தேர்தலில் தேமுதிக போட்டி: 5 வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது.

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, இப்போது 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

ஜங்புரா தொகுதியில் ஏ.சிவா, வசீர்புர் தொகுதியில் எஸ்.ஈஸ்வரி, ஜனக்பூரியில் சொர்ணம் காளிநாதன், புதுடெல்லியில் ஜி.எஸ்.மணி மற்றும் கல்காஜி தொகுதியில் ராமு ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

டெல்லியின் பல பகுதிகளில் தேமுதிக நிர்வாகிகளை நியமித்துள்ளது. தமிழர்கள் வாழும் பகுதியில் கட்சி நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த வாரம் டெல்லிக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். அப்போதே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in