Published : 28 Oct 2014 10:20 AM
Last Updated : 28 Oct 2014 10:20 AM

எத்தியோப்பியா விபத்தில் பலியான 5 பேரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

எத்தியோப்பியா சர்க்கரை ஆலையில் உயிரிழந்த 5 தமிழர்களின் உடல்கள், விமா னத்தில் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டன. உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர், மும்பை நிறுவனத்தின் மூலம், எத்தியோப்பியா நாட்டில் உள்ள சர்க்கரை ஆலை வேலைக்கு சென்றனர். கடந்த 24-ம் தேதி ஆலையில் இருந்த நீராவி குழாய் வெடித்ததில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (41), முருகானந்தம் (26), மயிலாடுதுறை தேவேந்திரன், வேல்ராஜ் மோகன், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த தேவதாஸ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகிய 6 பேர் பலியாயினர்.

தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் எத்தியோப்பியாவில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டது. உடல்களை பெற்றுக்கொள்ள, உறவினர்கள் விமான நிலை யத்துக்கு வந்திருந்தனர். உறவினர்கள் தங்கள் சொந்த செலவில் உடல்களை எடுத்துச் செல்ல வேண்டும் என மும்பை கம்பெனியின் நிர்வாகி பண்டித் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், உயிரிழந்த 5 பேருக்கும் இழப்பீடாக தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். இறந்தவர்களின் சம்பள பாக்கியை வழங்க வேண்டும். நிறுவனமே சொந்த செலவில் உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பண்டித்திடம், விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலை நிர்வாகத்திடம் இருந்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருவதாகவும், கம்பெனி செலவிலேயே உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும் பண்டித் உறுதி அளித்தார். இதை ஏற்காத உறவினர்கள், உடல்களை வாங்க மறுத்தனர்.

பின்னர், அமைச்சரை சந்தித்து முறையிடப் போவதாக கூறிவிட்டு தலைமைச் செயலகத்துக்கு சென்றனர். அமைச்சர் இல்லாததால் அதிகாரிகளை சந்தித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். சுமுக முடிவு ஏற்பட்டால், இரவு 10 மணிக்கு பிறகு உடலை உறவினர்கள் பெற்றுச் செல்வார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x