

கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றின் கரையோரம் கோயில், மடாலயங்களின் யானைகள் மற்றும் வனத்துறை யானைகளுக்கான நலவாழ்வு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த முகாமை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வி.செந்தூரபாண்டியன், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் தொடக்கிவைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த முகாம், பிப். 4-ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும். இதற்காக, தமிழக அரசு ரூ.1.53 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
கோயில் யானைகளுக்கு..
தேக்கம்பட்டி மலைப் பகுதியில் 9 ஏக்கர் இடத்தில் தொடங்கியுள்ள நலவாழ்வு முகாமில் கோயில்கள் மற்றும் மடாலயங்களுக்குச் சொந்தமான 31 யானைகள் வந்துள்ளன. புதுச்சேரி மனக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியும், நாகூர் தர்காவில் இருந்து பாத்திமாபீவி யானையும் அழைத்து வரப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். நலவாழ்வு முகாம்களில் தமிழகம் முழுவதும் 43 யானைகளும், வனத்துறைக்குச் சொந்தமான 55 யானைகளும் பங்கேற்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பல்வேறு காரணங்களால் மீதமுள்ள யானைகளுக்கு அந்தந்த பகுதிகளிலேயே நலவாழ்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் கூறுகையில், முதல் முறையாக இரண்டு பிரிவுகளாக யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது. இதில் யானைகளின் உயரம், எடை மற்றும் வயது அடிப்படையில் தினமும் நடைப்பயிற்சி, இயற்கை உணவு முறைகள், ஓய்வு ஆகியவை கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படும். முற்றிலும் இயற்கை சூழல் சார்ந்த பகுதியில் இந்த முகாம் நடைபெறுவதால் 48 நாட்கள் முடிவில் யானைகள் அனைத்தும் புத்துணர்வுடன் ஊர் திரும்பும் என்றார்.
உணவு வகைகள்
பாகன்களின் பராமரிப்பில், கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பில் யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. தினமும் பவானி ஆற்றில் குளித்து முடிந்தவுடன் தென்னை, பனை, உயர் ரக புல், கரும்பு, ஆல் விழுது உள்ளிட்டவை இயற்கை உணவாக கொடுக்கப்படுகின்றன. இதுதவிர அரிசி, கொள்ளு, பச்சைப்பயறு, உள்ளிட்ட தானிய வகைகளை வேகவைத்து, அதனுடன் காய்கறிகள், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வழங்கப்படுகின்றன.
யானைகளின் உடல் நலம் மற்றும் புத்துணர்வுக்கு நெல்லிக்காய் லேகியம், அஷ்ட சூரணம், மினரல் மிக்சர் எனப்படும் சரிவிகித ஊட்டச்சத்துப் பொருட்கள், வைட்டமின் மாத்திரைகள், ஸ்பிரே மருந்துகள் என ஏராளமான மருத்துவ ஊட்டச்சத்துப் பொருட்கள் தொடர்ச்சியாக யானைகளுக்கு வழங்கப்படுகின்றன.
முன்னேற்பாடுகள்
முகாம் நடைபெறும் பகுதியில் காட்டு யானைகளின் ஊடுருவலைத் தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, முகாம் பகுதிகளில் கண்காணிப்புக் கோபுரங்களும், கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி யானைகள் நடைப்பயிற்சிக்காக 2 கி.மீட்டருக்கு பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழாவில், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத் துறை செயலர் ஆர்.கண்ணன், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.