

அதிகரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாத நிலையில், 15 ஆயிரம் வழக்குகளைத் தாண்டியதால் சென்னை குடும்ப நல நீதிமன்றம் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் முதன்மை குடும்ப நல நீதிமன்றம் மற்றும் 3 கூடுதல் முதன்மை குடும்ப நல நீதிமன்றங்கள் என மொத்தம் 4 நீதிமன்றங்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி மொத்தம் 15 ஆயிரத்து 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விவாகரத்து கோரும் மனுக்கள், மீண்டும் சேர்ந்து வாழ உரிமை கோரும் மனுக்கள், ஜீவனாம்சம் கோரும் மனுக்கள், குழந்தைகளை தன் கட்டுப்பாட்டில் வளர்க்க உரிமை கோரும் மனுக்கள் என பல விதமான வழக்குகள் வருகின்றன.
விவகாரத்து வழக்குகள்
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் விவகாரத்து கோரும் வழக்குகளை மட்டும் பார்த்தால் கடந்த 2003-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 570 ஆக இருந்த எண்ணிக்கை 2012-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 770 என அதிகரித்து விட்டது. நடப்பாண்டில் இன்னும் மூன்று மாதங்கள் மீதி இருக்கும் நிலையில், செப்டம்பர் 3-வது வார நிலவரப்படி 3 ஆயிரத்து 500-க்கும் மேல் விவகாரத்து கோரும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
"வழக்குகளின் எண்ணிக்கை இவ்வாறு பெருகிக் கொண்டே செல்லும் நிலையில் அவற்றை எதிர்கொள்ள போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் உருவாக்கப்படவில்லை" என்கிறார் சென்னை குடும்ப நல நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ்.
"ஒரு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆண்டுக்கு 500 முதல் அதிகபட்சம் 1000 வழக்குகள் வரை மட்டுமே கையாள முடியும். ஆனால் சென்னையில் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் மட்டுமே உள்ள நிலையில் 15 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், விரைவான விசாரணை மற்றும் மக்களுக்கு விரைவான நீதி என்பது கேள்விக்குறியாகிறது.
இந்நிலையில் சென்னையில் கூடுதலாக 10 குடும்ப நல நீதிமன்றங்களை உருவாக்கக் கோரும் கருத்துரு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும்" என்றார்.
விடுமுறை கால நீதிமன்றம்
நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை வேகமாகக் குறைக்கும் நோக்கில் நாட்டுக்கே முன்மாதிரியான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் விடுமுறை கால நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது.
"எனினும் இதனால் பெரும் பயன் எதுவும் இல்லை" என்கிறார் சென்னை குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீ.கண்ணதாசன். "விடுமுறை நாள் நீதிமன்றங்களில் ஆஜராவதில் வழக்கறிஞர்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன.
ஆகவே, விடுமுறை கால நீதிமன்றம் என்பதற்குப் பதிலாக போதிய எண்ணிக்கையில் புதிதாக நீதிமன்றங்களை உருவாக்குவதே பிரச்னைக்கு தீர்வு தரும்" என்கிறார் அவர்.
நடப்பாண்டில் இன்னும் மூன்று மாதங்கள் மீதி இருக்கும் நிலையில், செப்டம்பர் 3-வது வார நிலவரப்படி 3 ஆயிரத்து 500-க்கும் மேல் விவகாரத்து கோரும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.