

தமிழகத்தில் அரக்கோணம், அம்பா சமுத்திரம், நாமக்கல் கடலூர் உட்பட 7 நகரங்களில் ரூ.58 கோடியில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். தமிழகத்திலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ரூ.20 கோடியில் ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகம் 21 நவீன அரிசி ஆலைகளை நடத்துகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் அரவை செய்யப்படுகிறது. 422 தனியார் ஆலைகள் மூலம் 14 லட்சம் டன் நெல் அரவை செய்யப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் அரிசி தேவையை கருத்தில் கொண்டு, கூடுதல் நவீன அரிசி ஆலைகள் அமைப்பது அவசியமாகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் வட்டத்தில் நெல் அறுவடை காலங்களில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 64 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இது 20 கி.மீ. தொலைவில் உள்ள சுந்தரக்கோட்டை அரிசி ஆலையிலும், திருவாரூர் மண்டல அரவை முகவர்களின் அரிசி ஆலைகளிலும் அரவை செய்யப் படுகிறது. இதனால், அரிசியை உற்பத்தி செய்து பொது விநி யோகத் திட்டத்துக்கு வழங்குவதில் தாமதமும், போக்குவரத்து செலவும் ஏற்படுகிறது.
மதிப்பு கூட்டு பொருட்கள்
இதை தவிர்க்க, தமிழகத்திலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ரூ.20 கோடியில் ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். இந்த ஆலை ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் நெல் அரவைத் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆலையில் கிடைக்கும் தவிடு, உமி போன்றவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சேமிப்புக் கிடங்குகள்
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.739 கோடியில் 6 லட்சத்து 88 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 165 சேமிப்புக் கிடங்குகள் கட்ட உத்தரவிடப்பட்டது. அதில் 2 லட்சத்து 49 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 106 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற கிடங்குகளின் பணி நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர், நீடாமங்கலத்தில் தலா 10 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள் ரூ.40 கோடியில் கட்டப்படும். இங்கு தானியங்கி இழுவை இயந்திரங்கள், பொருட்களை ஏற்றி, இறக்கி அட்டியிடும் இயந்திரங்கள், மூட்டைகளை லாரிக்கு கொண்டு செல்லும் இயந்திரங்கள் நிறுவப்படும்.
நெல் கொள்கலன்
திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வெயில், மழையால் நெல் பாதிப்படைகிறது. எனவே, நீண்டகால நெல் சேமிப்புக்கு பாதுகாப்பான நெல் கொள்கலன் (Silo) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாகை மாவட்டம் எருக்கூர் நவீன அரிசி ஆலை கிடங்கு வளாகத்தில் ரூ.58 கோடியே 48 லட்சத்தில் 50 ஆயிரம் டன் கொள்ளளவில் நெல் கொள்கலன் நிறுவும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தலா 15 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட நெல் கொள்கலன்கள் ரூ.40 கோடியில் இந்த ஆண்டு நிறுவப்படும்.
5 சேமிப்புக் கிடங்குகள்
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் தமிழகம் முழுவதும் 55 இடங்களில் 255 சேமிப்புக் கிடங்குகளை அமைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், வேலூர் மாவட்டம் அரக்கோணம், நாமக்கல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கடலூர் ஆகிய இடங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 600 டன் கொள்ளளவு கொண்ட 5 சேமிப்பு கிடங்குகள் ரூ.18 கோடியே 50 லட்சத்தில் நடப்பு ஆண்டில் அமைக்கப்படும். 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ரூ.20 கோடியில் புதிய கட்டிடங்கள் நடப்பு ஆண்டில் கட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.