

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததைக் கண்டித்து நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கலவரம் தொடர்பாக 52 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அம்மன்குளம் பகுதியில் மார்ச் 13-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா என்ப தால், 13-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. மார்ச் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என வாய்மொழியாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட் டுக்கு தேவையான முன்னேற்பாடு கள் செய்யப்பட்டன. இந்நிலையில், முன்னேற்பாடு பணிகளில் குறை பாடுகள் இருப்பதால் அதை சரி செய்யுமாறு அறிவுறுத்திய அலுவ லர்கள், மார்ச் 28-ம் தேதிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திட்டமிட்டபடி நேற்று ஜல்லிக்கட்டு நடத்த முடியா மல் போனதால் விரக்தியடைந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொது மக்கள் விராலிமலையில் நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடி அருகே சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. போராட் டம் பல இடங்களுக்கு விரிவடைந் ததால், போலீஸார் தடியடி நடத்தினர்.
அப்போது, போராட்டத்தில் ஈடு பட்டோர் கற்களை வீசியெறிந்ததில் 10 அரசுப் பேருந்துகள், 2 தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின. இதில், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ, சிறப்பு உதவி ஆய்வா ளர் அந்தோணி குரூஸ், போலீஸார் கென்னடி, பாலாஜி, குமரேசன், அரசுப் பேருந்து நடத்துநர் சிங்கம் புணரியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் பயணிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி ஐஜி வரதராஜூ, விரைந்து வந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்தார். போராட்டத்தில் ஈடுபட்டோர் வெளியேற்றப்பட்டதால் இரவு 10 மணிக்குப் பிறகு போக்குவரத்து படிப்படியாக சீரானது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடு பட்டதாக விராலிமலை, மாதிராப் பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 52 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் விராலிமலை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
குற்றச்சாட்டு
இதுகுறித்து, ஜல்லிக்கட்டு ஆர் வலர்கள் தரப்பில் கூறியபோது, “விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முன்னிலைப் படுத்தவில்லை என்பதற்காக, ஏற்பாடுகளில் குறை இருப்பதாகக் கூறி அதிகாரிகள் மூலம் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஜெ.லோகநாதன் கூறிய போது, “ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் காளைகள் தொழு வுக்குள் வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் உள்ள தடுப்புகளை பலப்படுத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. சுட்டிக்காட் டப்பட்ட பணிகளை முடித்துக் கொண்டு மார்ச் 28-ம் தேதிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர். ஆனால், அந்த ஊரில் கூடியிருந்த சிலர் திட்டமிட்டு அசம்பாவிதத்தை ஏற்படுத்தி உள்ளனர்” என்றார்.