

மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் சிறப்பு பயிற்சியாளர் ஹரினி மோகன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டிஸ்லெக்சியா என்பது கண்களுக்கு புலப்படாத கற்றல் திறன் குறைபாடாகும். இதை பள்ளிகளில் எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இந்த குறைபாடு உள்ள குழந்தைகளை படிக்காதவர்கள் என்று பொதுவாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், அவர்களுக்குள் ஓவியம் வரைவது, விளையாட்டு என பல திறமைகள் உள்ளன. அவற்றை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத் தின் நிறுவனர் டி.சந்திரசேகர் கூறும்போது, “பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாக உள்ளது” என்றார்.
அஸ்வின் இது குறித்து பேசும்போது, “டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேசிப் பழகும்போது, எனது பள்ளிப் பருவத்தில் எனது நண்பர்கள் சிலரும் இதுபோன்று இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நாம் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணாததால், அவர்களை மந்தமானவர்கள் என்று கிண்டல் செய்கிறோம். அது அவர்களை மிகவும் பாதிக்கும். இது குறித்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்” என்றார்.