Published : 10 Mar 2014 09:15 AM
Last Updated : 10 Mar 2014 09:15 AM

மாயமான மலேசிய விமானத்தில் பிரணாப் உறவினர்கள்

காணாமல்போன மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உறவினர்கள் என்று சேலம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் மோகன் குமரமங்கலம் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சனிக்கிழமை சென்ற பயணிகள் விமானம் வியட்நாம் அருகே காணாமல்போனது. கடலில் விழுந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் விமானத்தில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தியர்களில் இருவர் பிரணாப் முகர்ஜியின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு அருகே குமரமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் உமா முகர்ஜி. தற்போது அவர் சென்னை யில் வசித்து வருகிறார். அவரது உறவினர் முகேஷ் முகர்ஜி. கனடா குடியுரிமை பெற்று அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணி நிமித்தமாக தனது சீன மனைவி ஜாமு (37) என்பவருடன் மலேசியாவில் இருந்து பெய்ஜிங் சென்றுள்ளார். அவர்கள் சென்ற விமானம் பின்னர் காணாமல்போனது. அவருக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சென்னையில் வசிக்கும் குமரமங்கலத்தைச் சேர்ந்த உமா முகர்ஜிக்கு, கணவர் வழியில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை உமா முகர்ஜியின் உறவினரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமரமங்கலத்தின் மகனுமான சேலம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் மோகன் குமரமங்கலம் உறுதி செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x