

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேசிய அளவில் கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர். நந்தினி முதலிடம் பிடித் துள்ளார். தமிழக அளவில் எம்.பிரதாப் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வு நடத்துகிறது. முதல்கட்ட (பிரிலிமினரி) சிவில் சர்வீஸ் தேர்வில் நாடு முழுவதும் இருந்து 6.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக் கான மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 3 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் தேர்வு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப் பட்டது.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாடு முழுவதும் இருந்து 1099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந் துள்ளனர். இவர்களில் தேசிய அளவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.ஆர். நந்தினி என்பவர் முதலிடத்தை பெற்றுள்ளார். தமிழக அளவில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்.பிரதாப் என்பவர் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவர் அகில இந்திய பட்டியலில் 21-வது இடத்தை பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய அளவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.ஆர். நந்தினி என்பவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.