Last Updated : 30 Mar, 2017 11:09 AM

 

Published : 30 Mar 2017 11:09 AM
Last Updated : 30 Mar 2017 11:09 AM

20 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை: பழுதடைந்த சாலையால் பரிதவிக்கும் பில்லூர் கிராம மக்கள்

கோவை மாவட்டம் காரமடையிலிருந்து மஞ்சூர் சாலையில் 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பில்லூர். இங்குள்ள அணையின் நீரைக் கொண்டு கோவை மாநகராட்சி, புறநகர்ப் பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. மேலும், மேட்டுப்பாளையம், திருப்பூர் பகுதிகளுக்கான 18 குடிநீர்த் திட்டங்கள் இந்த அணையின் நீரை நம்பியுள்ளன.

பில்லூர் அணையின் நீர் மின் உற்பத்தி நிலையப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் இங்குள்ளன. இதை சார்ந்துள்ள பில்லூர் கிராமத்தில் காவல் நிலையம், தொடக்கப் பள்ளி, சிறிய கடை வீதி ஆகியவை உள்ளன. மின் உற்பத்தி நிலையப் பணியாளர் குடியிருப்பில் 90 சதவீத வீடுகள் பூட்டியே உள்ளன. இதன் ஒரு பகுதி புதர்மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

பில்லூரைச் சுற்றியுள்ள குண்டூர், அத்திக்கடவு, சுரண்டி, புதுக்காடு, கூடப்பட்டி, மாயாறு, கொத்துக்காடு, போரப்பதி, வீரகல்லு, பரளி பவர் ஹவுஸ், பரளிக்காடு, நீராடி கிராமங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதால், 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.

காவல் நிலையம் அருகேயுள்ள தொடக்கப் பள்ளியில் 22 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேல்நிலைக் கல்வி பயில வெள்ளியங்காடு அல்லது காரமடைக்குத்தான் செல்ல வேண்டும். மேலும், பொதுமக்கள் பொருட்கள் வாங்க நகரப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

எனினும், கரடு முரடான சாலையில் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இங்கிருந்து வெள்ளியங்காடு வரை செல்லும் சாலை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த சாலையைப் புதுப்பிக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மின் நிலையப் பணியாளர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களுக்குச் செல்லும் சாலைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால், பில்லூர் மின் நிலைய சாலை மட்டும் மோசமாக உள்ளது. இந்த சாலை மின்சாரத் துறை வசம் உள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத் துறையிடம் சாலையை ஒப்படைத்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், புதிதாக சாலை அமைக்க வனத் துறை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை.

இங்குள்ள பணியாளர் குடியிருப்பில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், சுமார் 15 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகாதவர்கள். திருமணமாகியிருந்தாலும் அவர்கள் குடும்பத்தினர் காரமடை, மேட்டுப்பாளையத்தில்தான் வசிப்பார்கள்.

அவசரமாக மருத்துவமனைக்கு செல்வதுகூட மிகவும் சிரமம். இதனால், இங்கு வரும் பணியாளர்கள் விரைவில் பணிமாறுதல் பெற்றுச் சென்றுவிடுகின்றனர். பணி மாறுதலில் இங்கு வந்தால்கூட, யாருடைய செல்வாக்கிலாவது உத்தரவை மாற்றிக்கொண்டு, இங்கிருந்து சென்று விடுவார்கள் என்றனர்.

இப்பகுதி மக்கள் கூறும்போது, “தினமும் 3 முறை காரமடை, கோவையிலிருந்து பேருந்து வருகிறது. அந்தப் பேருந்தும் அவ்வப்போது பழுதாகி நின்றுவிடும். காட்டு யானைகள் வழிமறிக்கும். அதனால் எந்த நேரத்துக்கு பேருந்து வரும் என்று உறுதியாகக் கூற முடியாது. பழுதடைந்த சாலையால் பேருந்து வருவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இந்த கிராமம் நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்டது. அணை கட்டியதிலிருந்தே கிராம மேம்பாட்டில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. தேர்தலின்போது மட்டுமே அரசியல்வாதிகள் வருவார்கள்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இங்குள்ள பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் செல்கிறது. மின்சாரமும் எடுக்கிறார்கள். ஆனால், இந்தக் கிராமத்துக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அருகில் உள்ள நீராடி, பரளிக்காடு, நெல்லிமரத்தூர், பூய்க்கமரத்தூர், காடியூர், சேத்துமடை, கீழ்பில்லூர் உள்ளிட்ட பழங்குடி கிராம மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், ஆட்சியரிடம் மனு வழங்கவும் முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x