

நடிகை லிஸி - இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோர் விவாகரத்து பெறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று நீதிமன்ற கோப்பில் கையெழுத்திட்டனர்.
‘சிநேகிதி’, ‘சிறைச்சாலை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். இவரும் ‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை லிஸியும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக் கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றம் வழங்கிய 6 மாத கால அவகாசத்துக்கு பிறகு நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிய லிஸியும், பிரியதர்ஷனும் முழுமனதோடு பிரிவதை உறுதிப்படுத்தும் விதமாக நீதிமன்ற கோப்பில் கையெழுத்திட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் தீ்ர்ப்பை வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
லிஸி கருத்து
இது தொடர்பாக நடிகை லிஸி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன். இத்தருணத்தில் இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் இரு குழந்தை களின் காதலுக்கும், பாசத்துக்கும் என்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.