நீதிமன்ற கட்டணங்கள் உயர்வு: பேரவையில் மசோதா தாக்கல்

நீதிமன்ற கட்டணங்கள் உயர்வு: பேரவையில் மசோதா தாக்கல்

Published on

நீதிமன்ற கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மசோதாவில், ‘‘நீதிமன்ற கட்டணங்களை மாற்றி அமைத்து செம்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைப்படி 1955-ம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உயர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றக் கட்டணங்கள் உயர்த்தப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டம் 4-ம் பிரிவு, உட்பிரிவு 1-ன்படி ஆணையத்தின் உறுப்பினராக தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி அறிந்திருக்கும் ஒருவர், பாரம்பரிய மேலாண்மை, பண்பாடு விவகாரங்களில் ஈடுபாடு உள்ள அரசுசாரா நிறுவனத்தில் இருந்து ஒருவர் மற்றும் கலை, பண்பாட்டு பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளையில் இருந்து ஒருவர் நியமனம் செய்யப்படுவார்கள்.

இனி தமிழ்நாடு பாரம்பரிய ஆணைய உறுப்பினராக கலை, பண்பாட்டு பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளையில் இருந்து ஒருவரை நியமிக்க தேவையில்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தாக்கல் செய்தார்.

சென்னை பல்கலை. மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு ஜெ. பெயரை சூட்ட வேண்டும்: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

ஜெயலலிதா பிறந்த தினத்தை வளர் இளம் பெண்கள் தினமாக அறிவிப்பதுடன், சென்னை பல்கலைக்கழகம், அரசு பல்நோக்கு மருத்துவமனை, விளையாட்டு பல்கலைக்கழகங்களுக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என குடியாத்தம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது குடியாத்தம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியை வளர் இளம் பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டும். அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை, விளையாட்டு பல்கலைக்கழகங்களுக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்வி மையத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி பாடமாக கொண்டுவரவேண்டும்.

தமிழக பள்ளி பாடத்திட்டம் மட்டுமின்றி தேசிய அளவில் பள்ளி பாடத்திட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை, பாடமாக அமைக்கப்பட வேண்டும். விளையாட்டு பல்கலைக்கழகத்தில், பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், சிலம்பம் உள்ளிட்டவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in