Published : 28 Jun 2017 11:08 AM
Last Updated : 28 Jun 2017 11:08 AM

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய அரசு கவனத்தோடு செயல்பட வேண்டும்: வாசன்

ஒட்டுமொத்த பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய பாஜக அரசு கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைக்காக ஒரே வரி விகிதம் என்ற ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் குறிப்பாக ஜவுளி, பட்டாசு, கிரைண்டர், உணவகங்கள் போன்ற தொழிலில் ஈடுபடும் முதலாளிகள், தொழிலாளிகள், இவைகளை பயன்படுத்தும் நுகர்வோர் என ஒட்டு மொத்த பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜவுளித் தொழிலில் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். இம்முறையினால் நூல் கொள்முதல் முதல் துணிகளை முழு உற்பத்தி செய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும் வரி விதிப்பு விதிக்கப்படுகிறது. இதனால் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.

ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 27.06.2017 சேலத்தில் சுமார் 600 ஜவுளிக்கடைகள் மூடப்பட்டதோடு, மாவட்டம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் சுமார் 8 லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகின்றனர். இந்த கடை அடைப்பு சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மேலும் விசைத்தறி உரிமையாளர்கள், தறி நெய்வோர், சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளிகள் என ஜவுளித் தொழிலை நம்பியுள்ளவர்கள் அனைவருமே பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே மத்திய பாஜக அரசு ஜவுளித் தொழிலுக்கான சரக்கு மற்றும் சேவை வரியில் ஜவுளித்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கை ஏற்று செயல்படுத்த வேண்டும்.

அதே போல பட்டாசுத் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி தொழிலே முடங்கிப்போகும் என்பதால் இதற்கான வரி விகிதத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வரி விதிப்பு இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியோடு செயல்படுத்த வேண்டும்.

மேலும் கிரைண்டர் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டால் இதனை உற்பத்தி செய்பவர்கள், இத்தொழிலைச் சார்ந்துள்ள சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய பாஜக அரசு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது.

எனவே ஜவுளி, பட்டாசு, உணவகங்கள், கிரைண்டர், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல்வேறு முக்கிய தொழில்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியில் உற்பத்தி செய்வோர், தொழிலாளிகள், வியாபாரிகள், நுகர்வோர் என ஒட்டுமொத்த பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய பாஜக அரசு கவனத்தோடு செயல்பட வேண்டும்.

மேலும் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் தமிழகத்தில் தொழில்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பாதிக்கப்படக்கூடாது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x