

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை யால், கொடைக்கானலில் சுற்று லாப் பயணிகள் வருகை நேற்று அதிக அளவில் இருந்தது.
கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் மட்டுமில்லாது, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை உள்ளது. வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இந்த வாரம் விடுமுறை நாட்களுடன் திங்கள்கிழமை சுதந்திர தின விடுமுறையும் சேர்ந்ததால் 3 நாட் கள் விடுப்பில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங் களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக் கானலுக்கு வந்தனர்.
வாகன நெரிசல்
இதனால் கொடைக்கானலில் ஏழு ரோடு மற்றும் சுற்றுலா இடங்களான பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாய்ண்ட், தூண் பாறை பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது. வாகன நெரிசலால் சுற்றுலா இடங் களை முழுமையாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
கொடைக்கானலில் நேற்று காலை முதலே லேசான சாரல் அவ்வப்போது பெய்தது. கோக் கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா பகுதிகளில் மேகக் கூட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை தழுவிச் சென்றன. சாரல் மழையிலும் ஏரிச்சாலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தரைப் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குளுமையை எதிர்பார்த்து கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்ததற்கு மேலாக ரம்யமான சீதோஷ்ண நிலை இருந்தது.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், வழக்கமான விடுதிக் கட்டணத்தை விட 2 மடங்காக உயர்த்தி வசூலித்தனர். முன்னதாகவே, அறையை பதிவு செய்தவர்கள் தவிர, பலர் தங்க அறை கிடைக்காமல் தவித்தனர்.