33 ஆண்டுகளாக தாமதமாகிவரும் தேனி திட்டச்சாலை பணி நிறைவடைவது எப்போது? - போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
தேனி நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட திட்டச்சாலை பணி, கடந்த 33 ஆண்டுகளாக தாமதமாகிவருவதால் பொது மக்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
தேனி அல்லிநகரம் சாலையிலும், தேனி மதுரை சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இச்சாலைகளில் கேரளாவிலிருந்து வரும் பயணிகள் வாகனங்கள், தேனியிலிருந்து காய்கறி மற்றும் உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்கின்றன.
போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்கும் வகையில், நகராட்சி சார்பில் 1984-ம் ஆண்டு பிரதான திட்டச்சாலை மற்றும் இணைப்பு சாலை திட்டம் என்ற பெயரில் புதிய சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 60 அடி அகலத்தில் அல்லிநகரத்தில் இருந்து தேனி பள்ளிவாசல்தெரு வழியாக சாலை அமைப்பதற்கும், மீறு சமுத்திரம் கண்மாய் கரையை ஒட்டியுள்ள பள்ளிவாசல்தெரு வழியாக கம்பம் சாலையை இணைக்கவும், கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தின் அருகே சுப்பன்செட்டிதெரு வழியாக அரண்மனைபுதூர் விளக்கு வரை மற்றொரு பிரதான சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க 40 அடி அகலத்தில் 10 இணைப்பு சாலைகள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், 33 ஆண்டுகளாகியும் பெரும்பாலான பணிகள் நிறைவுபெறவில்லை. இத்திட்டத்தின் கீழ் சில சாலைகளில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேனி நகரை சேர்ந்த சிலர் கூறியதாவது:
மகேந்திரன் (தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்):
திட்டச்சாலை பணி தொடங்கிய சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்கிய நிலையில் 33 ஆண்டுகளாக இப்பணி இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. இந்த சாலைப் பணி முடிந்திருந்தால் வாகனங்கள் நகர் பகுதிக்குள் வராமல் புறநகர் நகர் பகுதி வழியாகவே செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்.
பிரபு (டீக்கடை ஊழியர்):
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கின்றன. ஆனால், அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப் படவில்லை. போக்குவரத்து நெரிசலை தடுக்க, உடனடியாக திட்டச்சாலைப் பணிகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.
சிவா (ஓட்டல் உரிமையாளர்):
சாலை பணிகளை விரைந்து முடிக்க அனைத்து கட்சியினரின் பங் களிப்பு அவ சியம். புதிய சாலை கள் அமைக்கப்பட்டால் பயண நேரம் குறைவதோடு, வாகனங்களில் எரிபொருள் பயன்பாடு மிச்சமாகும். விபத்துக்களும் பெரும் அளவில் குறையும்.
நீதிமன்ற வழக்குகளால் பணி பாதிப்பு
நகராட்சி ஆணையர் (பொ) ராஜாராம் கூறும்போது, “திட்டச்சாலை பணி பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. சாலைகள் அமைக்கும் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான சில இடங்களும் இருந்ததால், அதை நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி பணிகளை தொடர்ந்து செய்து வந்தது. இதற்கிடையில் சிலர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் பணிகள் சற்று தாமதமாகியுள்ளது. மற்ற பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
