Published : 02 Sep 2016 08:15 PM
Last Updated : 02 Sep 2016 08:15 PM

சிறுவாணியின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

சிறுவாணி நதி அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி அம்மாநிலத்துக்குள்ளேயே ஓடி, பவானி ஆற்றுடன் கேரள மாநிலத்துக்குள்ளேயே சேருகின்ற நதியாகும். இது பன்மாநில நதியான காவிரியின் துணை நதியாகும். எனவேதான், சிறுவாணி நதி, பவானி ஆற்றுப்படுகை ஆகியவற்றில் கிடைக்கும் நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளது.

கடந்த 2012 ஜூன் மாதத்தில் அட்டப்பாடி பாசனத் திட்டத்துக்காக கேரளம் அணை கட்ட முயற்சிக்கிறது என ஊடகங்களில் செய்திகள் வந்தன. இது தொடர்பாக கடந்த 21-6-2012-ல் முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து கேரளம், கர்நாடக அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதில் உத்தரவு வரும் வரை கேரள அரசின் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மத்திய நீர்வள குழுமம் எந்த ஒரு தொழில்நுட்ப அனுமதியும் வழங்கக் கூடாது’’ என கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன.

19-9-2013-ல் தமிழக அரசுக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில், ‘‘சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், காவிரி நடுவர் மன்றத்தில் அனுமதியை பெறும்படி கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது’’ என தெரிவித்திருந்தது.

மத்திய சுற்றுச்சீழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 92-வது கூட்டம் கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்றது. அதில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொண்டது. தமிழக அரசின் கருத்து பெறப்பட்ட பிறகுதான் இது குறித்து பரிசீலிக்கப்படும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்ற வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தில், கேரள அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய நீர்வள ஆதார அமைச்சரம் 19-9-2013-ல் எழுதிய கடிதத்துக்கும், கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்ற வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கும் முரணானதாக இந்த பரிந்துரை உள்ளது. வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் கூடுதல் பொருளாக இதனை எடுத்துக் கொண்டு அவசர கதியில் ஒப்புதல் வழங்கியுள்ளது வருத்தம் அளிக்கிறது.

இக்கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பில், மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சகம் அனுப்பிய பல கடிதங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்கவில்லை என உண்மைக்கு மாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டப்பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்துக்கு எதிராக அவசர கதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த சட்டப்பேரவை கருதுகிறது.

இதற்கான குறிப்பில் ‘in spite of’ என்பதற்குப் பதிலாக ‘instead of’ என எழுதப்பட்டிருப்பதே இந்த அவசர கதியை தெரிவிப்பதாக இந்த சட்டப்பேரவை கருதுகிறது.

எனவே, வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்துக்கான நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என இந்த சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை நடைமுறைக்கு வரும் வரையிலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் இறுதி செய்யப்படும் வரையிலும் கேரள, கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசை இந்த சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), முகம்மது அபுபக்கர் (முஸ்லிம் லீக்), கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருன் (திமுக), உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோர் பேசினார்கள்.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x