Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

கூட்டணிக்காக வலைவீசும் தமிழக அரசியல் கட்சிகள்: திரிசங்கு நிலையில் தேமுதிக

தமிழகத்தில் திமுக, பாஜக, அதிமுக கட்சிகள் தங்கள் தலை மையிலான கூட்டணியைப் பலப்படுத்த பகீரத பிரயத்தனம் செய்துவருகின்றன. அவைகளின் தற்போதைய நிலவரம் இதோ..

பாஜக கூட்டணியில்..

பாஜக-தேமுதிக உறவு உறுதி ஆகாத நிலையில், மதிமுக, ஐஜேகே, இந்திய மக்கள் கட்சி (யாதவர் மகா சபை), கொங்கு பேரவை ஆகிய கட்சிகள் பாஜக-வுடன் கைகோத்து விட்டன. கூட்டணியில் எட்டு தொகுதிகளை கேட்கும் மதிமுக. வியாழக்கிழமை அதுகுறித்து பாஜக-வுடன் அதிகாரப்பூர்வமாக பேசுகிறது. இதனிடையே, இந்திய மக்கள் கட்சியின் தேவநாதனும் பாஜக கூட்டணியில் எட்டுத் தொகுதிகளுக்கு அடிபோடுகிறார். பி.டி.அரசகுமார் கட்சியும் பாஜக கூட்டணிக்கு தூது விடுகிறது.

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் ராஜ்நாத் சிங்கை சந்தித்த அன்புமணி ராமதாஸும் தேர்தல் கூட்டணி பற்றி பேசியதாகச் சொல்கிறார்கள். கூட்டணியில் தேமுதிக வரும் பட்சத்தில் அவர்களைவிட எங்களுக்கு ஒரு தொகுதி கூடுதலாக வேண்டும்’ என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.

தனிமையில் காங்கிரஸ்

இப்போதைக்கு காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் எப்படியும் திமுக நம் பக்கம் வந்துவிடும் என மேலிடத் தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘திமுக தரும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு தேர்தலை சந்திப்பதுதான் புத்திசாலித்தனமான இருக்கும் என டெல்லிக்கு தனது யோசனையை சொல்லி இருக்கிறாராம் தங்கபாலு. சமீபத்தில் கட்சியின் தேர்தல் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ப.சிதம்பரம், திமுக - காங்கிரஸ் உறவைப் புதுப்பிக்க புதுப்பாதை போடுவதாகச் காங்கிரஸ் தரப்பிலிருந்தே சொல்கிறார்கள்.

மாநிலங்களவைக்கு முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவித்தி ருக்கும் திமுக தலைவர் கருணா நிதி, இந்தமுறையும் காங்கிரஸ் தங்களை ஆதரிக்கும் என மனக் கோட்டை கட்டுகிறார். அதேசமயம், ‘நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்வது குறித்து கடைசி நேரத்தில்தான் தலைவர் முடிவு செய்வார். அதற்கு முன்பாக தேமுதிக-வுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்’ என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

நம்பிக்கையில் அதிமுக

அதிமுக கூட்டணியில் இடதுசாரிகளே கூட்டணியில் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை. தா.பாண்டியனும் ஜி.ராமகிருஷ்ணனும் தாங்கள் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் அதிமுக இன்னும் அதை ஆமோதிக்கவில்லை. அதிமுக நிர்வாகிகளோ, ‘கருணாநிதி கடைசி நேரத்தில் காங்கிரஸை பரிசீலிப்பதைப்போல அம்மாவும் கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியைப் பரிசீலிப்பார்’ என்கிறார்கள்.

காத்திருந்தால் லாபமா?

தேமுதிக-வைப் பொறுத்தவரை காத்திருந்தால் லாபம் என்று நினைக்கிறது. திமுக, பாஜக என இரு தரப்பிலும் அன்புத் தொல்லைகள் தொடர்ந்தாலும் இந்த விஷயத்தில் திமுக முந்திவிட்டதாகவே கூறுகிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள். அதனால்தான், ‘தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை’ என்று கடந்த வாரம் பேசிய கருணாநிதி நேற்று ‘தேமுதிக-வுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்’ என்று சொல்லியிருக்கிறார். உளுந்தூர்பேட்டை மாநாடு வரை இந்த சஸ்பென்ஸை கலைக்கப் போவதில்லை தேமுதிக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x