

மக்கள் போராட்டம் நடத்திய இடத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் மதுக்கடை மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டது. ஆனால், அவற்றை மக்கள் வாழும் பகுதிகளில் திறக்க அரசு முயல்வதும், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பழிவாங்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான போராட்டங்களும், பழிவாங்கலும் அதிகமாக நடக்கின்றன. சாமளாபுரம் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழகம் முழுவதற்கும் பொருந்தும்.
அதனால் கடந்த 13 நாட்களில் எந்தெந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராடினார்களோ அக்கடைகள் மூடப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராட்டங்கள் நடத்தப் பட்டனவோ, அங்கெல்லாம் புதிய கடைகள் திறக்கப்படக்கூடாது. திறக்கப்பட்டிருந்தால் மூடப்பட வேண்டும்.
மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட வேண்டும். எவரேனும் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் மதுவில்லாத, மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசின் பயணம் அமைய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.