

கிராமப்புற விவசாயிகளை இன்னும் சொட்டு நீர் பாசனத் திட்டம் சென்றடையாததால் இந்த திட்டத்துக்கு 100 சதவீதம் மானியத்தில் தோட்டக்கலைத் துறை ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி பயன்பாடில்லாமல் முடங்கிப்போய் உள்ளது.
ஒரு சொட்டு நீரைகூட வீணாக்காமல் செடிகளின் வேரின் பக்கத்திலே தண்ணீரை முழுமையாக கொண்டு சேர்க்க உதவும் தொழில்நுட்ப திட்டம் சொட்டு நீர் பாசனத் திட்டம். இந்த திட்டம், இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம். குறைவான நீரில், நிறைவான மகசூலே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால், இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற விவசாயிகளை இன்னும் சென்ற டையவில்லை.
இந்த திட்டத்துக்கு தோட்டக்கலைத் துறை சிறு குறு விவசாயிகளுக்க 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் கொடுக்க முன் வந்தும், இந்த திட்டத்தை தங்கள் விளைநிலங்களில் செயல்படுத்த விவசாயிகளுக்கு ஆர்வமில்லை. அதனால், இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கோடிக்கணக்கில் நிதி பயன்பாடு இல்லாமல் முடங்கிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: சொட்டு நீர் பாசனத் திட்டம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் புதிது அல்ல. 1960-70-களிலேயே வந்துவிட்டது. 80-களில் தமிழக பல்கலைக்கழகங்களில் சொட்டு நீர் பாசனத் திட்டம் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால், அரசு கடந்த 2000-ம் ஆண்டு முதலே பெரிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
2005-ம் ஆண்டு முதல் தோட்டக்கலைத் துறை செயல்படுத்தப்படுகிறது. ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்பட்சத்தில் விவசாயிகள் பாத்தி பாசனம் மூலம் ஒரு நாளைக்கு 40, 50 லிட்டர் தண்ணீரை செலவிடுகின்றனர். செடிகள், தங்களுக்குத் தேவையான 2 லிட்டர் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்கிறது. மீதி தண்ணீர் ஆவியாகியும், பூமிக்கடியிலும் சென்று வீணாகிறது. கடந்த 2, 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக தற்போது விவசாயிகள் ஓரளவு சொட்டு நீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்கள் சொட்டு நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன. 2016-17-ல் தமிழகத்துக்கு ரூ.260 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மதுரைக்கு 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ. 2.50 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்காக தமிழகத்துக்கு ரூ.803 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு 1960 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்தைப் பொறுத்தவரையில் அரசு எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆனால், விவசாயிகளிடம் ஆர்வமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வரவேற்பு இல்லாததற்கு காரணம் என்ன?
இதுகுறித்து மேலூர் வட்டார துல்லியப் பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் சாம்பிராணிப்பட்டி எம்.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியது: சொட்டு நீர் பாசனம் நல்ல திட்டம்தான். இரண்டரை ஏக்கர் நன்செய், 5 ஏக்கர் புன்செய் வைத்திருப்பவர்கள், சிறு குறு விவசாயிகள். இதற்கு மேலான நிலம் வைத்திருப்பவர்கள், பெரிய விவசாயிகள். சிறு விவசாயிகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
சிறு விவசாயிகள் என்பதற்கு வருவாய்த் துறையிடம் சான்று வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் மட்டுமே வழங்கப்படுகிறது. 25 சதவீதம் கையில் இருந்து பணம் கட்டிய பிறகே மானியம் வழங்குகின்றனர். சொட்டு நீர் பாசனத்துக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு அரசு தேர்வு செய்த நிறுவனங்கள், கூடுதலான திட்ட மதிப்பீடு கொடுக்கின்றனர். அதனால், இந்த திட்டத்துக்கு விவசாயிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை என்றார்.