

அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிமுக தலைவர் வைகோ வாழ்த்து மற்றும் அறிவுரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முறையே மார்ச் 2 அன்றும், மார்ச் 8 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக்கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். அடுத்தகட்ட உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத் தேர்வுகள் விளங்குகின்றன.
மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு இளம் மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் எழுதப்போகின்ற இத்தேர்வுகள் மட்டுமே அவர்களின் அறிவாற்றலை அளவிடும் கருவி அல்ல. மாணவர்தம் பயிலும் திறனை அறிந்திடும் அளவுகோல் என்ற அளவில் மட்டுமே தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும், கெடுபிடிகளையும் திணிக்க முயல வேண்டாம். அதனால் எதிர்விளைவுகளே ஏற்படும். தம் வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை விதைத்து குழந்தைகளைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
தேர்வுக்குப் புறப்படும் முன் தேவையான எழுதுபொருள்கள், தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படும் உபகரணங்கள், குடிநீர் பாட்டில்களை வீட்டிலேயே சரிபார்த்து எடுத்துச் செல்லுங்கள். தேர்வுக் காலத்தில் உடல் நலத்தினை நன்கு பாதுகாத்துக் கொள்ளுங்கள். தேவையான நேரம் தூங்கி, நன்கு திட்டமிட்டு தேர்வுக்குத் தயாராகுங்கள்.
பொதுத் தேர்வுக்குச் செல்லுகின்ற மாணவர்களை இடைநில்லாப் பேருந்துகள் உள்பட அனைத்துப் பேருந்துகளுமே எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்ல தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் அனைத்துத் தேர்வு மைய அறைகளிலும், சுத்தமான குடிநீர் வசதி செய்திட தேர்வுத் துறையினர் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில் அரசியல் கட்சிகளோ இதர அமைப்புகளோ ஒலிபெருக்கியை இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.
நுண்மாண் நுழைபுலத்தோடு நம் மண் வாழ வழிகாட்ட வல்லவர்களாகவும், எதிர்காலத் தமிழகத்தின் வார்ப்புகளாகவும், நான் நம்பிக் கொண்டிருக்கின்ற என் இனிய மாணவச் செல்வங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையப்பெற என் இதயபூர்வமான வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.